‘பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல்’- இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

டெல் அவிவ்: பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்கு ஹமாஸ்கள் விடுவிக்காவிட்டால் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நென்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2023, அக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 48,219 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேல் – ஹாமாஸ்கள் இடையே கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

இந்தச் சூழலில், போர் நிறுத்தத்தின் முக்கியமான கொள்கைகளை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சனிக்கிழமை விடுவிக்கப்பட இருந்த 3 இஸ்ரேலியக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், “சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து விடும். ஹமாஸ்கள் இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலின் அத்துமீறல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு போய் விட்டது என்று குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், இது இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் விடுதலையைத் தடுக்கும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸ்களின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்டா, “இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை கண்காணித்து வருகிறோம். ஹமாஸ்கள் அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஹமாஸ்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டனர். மேலும் காசா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள படைகளை திரும்பப் பெற ஹமாஸுக்கு உத்தரவிட்டுள்ளோம்.” என்று கூறியுள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக 21 பிணைக்கைதிகளை இதுவரை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தகது.

இதனிடையே, வரும் சனிக்கிழமைக்குள் சுமார் 70 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் ஒட்டுமொத்த போர்நிறுத்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஹமாஸ்களின் தரப்பு அதிகாரி, ஷாமி அபு ஷுகாரி கூறுகையில், “இரண்டு தரப்புகளுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் இருப்பதையும், அது மதிக்கப்பட வேண்டும் என்பதையும் ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமே சிறைபிடிக்கப்பட்டவர்களை திரும்பப் பெறுவதற்கான ஒரே வழி, அச்சுறுத்தும் வகையில் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை, மாறாக அது பிரச்சினையைத் தீவிரமாக்கும்.”” என்று தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.