மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் – பின்புலம் என்ன?

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்து நான்கு நாட்களான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது கவனிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2027-ம் ஆண்டு வரை பதவிக் காலம் கொண்ட மணிப்பூர் சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன.

இந்த கலவரத்தில் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர். 1,108 பேர் காயம் அடைந்தனர். 60 ஆயிரம் பேர் தாங்கள் வசித்த பகுதிகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். 2 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு ஆளும் பாஜக அரசால் தீர்வு காண முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் பிரேன் சிங்கை மாற்றவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர் கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரும் சூழல் எழுந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், கொறடா உத்தரவை மீறி பிரேன் சிங் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வாக்களித்தால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவதை கட்சி மேலிடம் விரும்பவில்லை. இதையடுத்து, மேலிட அழைப்பின்பேரில் டெல்லி சென்ற பிரேன் சிங், அங்கு பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூரில் இப்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.