Rishabh Pant News | இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி அடுத்தாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறது. பாகிஸ்தான் இப்போட்டியை நடத்தினாலும், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. எஞ்சிய போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்த தொடருக்கு செல்வதற்கு முன்பாக இந்திய அணி இப்போது மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி உற்சாகத்தில் இருக்கிறது. அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட எல்லா பேட்ஸ்மேன்களும் சூப்பர் பார்மில் உள்ளனர். ஸ்ரேயாஸ் அய்யர் டாப் பார்மில் இருக்கிறார்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வெல்வற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடியதுபோலவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய விளையாடும் என தெரிவித்துள்ள அவர், ரிஷப் பந்த் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? என்ற கேள்விக்கு காரசாரமான பதிலை கொடுத்துள்ளார். அதாவது பந்துக்கு இப்போதைக்கு இந்திய அணியில் இடம் இல்லை என்பதை சூசகமாக கூட இல்லாமல் வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்.
இது குறித்து கவுதம் கம்பீர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, ” ஒருநாள் போட்டிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றால் அது கேஎல் ராகுல் தான். அவர் அணியில் இருக்கும்போது இன்னொரு பிளேயருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணியில் சேர்க்க இயலாது. ரிஷப் பந்த் நல்ல பிளேயர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஓடிஐ பார்மேட்டில் கேஎல் ராகுலுக்கு தான் அணி முக்கியத்துவம் கொடுக்கிறது. அவர் இல்லாத சூழலில் ரிஷப் பந்தை அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பெறுவார்” என தெரிவித்துள்ளார்.
இதனால் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்துக்கு இடம் இல்லை என்பதை பயிற்சியாளர் கவுதம் கம்பீரே வெளிப்படையாக அறிவித்துவிட்டார். டி20 என்றால் சஞ்சு சாம்சன், ஒருநாள் போட்டி என்றால் கேஎல் ராகுல், டெஸ்ட் போட்டி என்றால் ரிஷப் பந்த் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என இந்திய அணி தீர்மானித்து வைத்திருப்பது கவுதம் கம்பீர் பேட்டி மூலம் தெளிவாகியுள்ளது.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வை அறிவிக்கும் 5 முக்கிய வீரர்கள்!
மேலும் படிக்க | மும்பை அணியில் விலகும் முக்கிய வீரர்கள்; புஸ்வானமாகும் பிளான்கள்… வீக் ஆகும் பௌலிங்!