வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி பிப்.14 (நாளை) அதிகாலை 2.30 மணி அளவில் அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்கிறார். இருவரும் வர்த்தக ரீதியான உறவு, சட்டவிரோத குடியேற்ற விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு முன்னதாக சூசக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப். அதில் ‘Reciprocal Tariff’ என்பது இடம்பெற்றுள்ளது. அதுதான் இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.
“மூன்று சிறந்த வாரங்கள் சிறப்பானதாக இருக்கலாம். ஆனால், இன்றைய நாள் அதற்கும் மேலானது. ‘பரஸ்பர வரி விதிப்பு!’ மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குவோம்” என தனது பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று மூன்று வார காலம் நிறைவடைந்துள்ளது.
அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கு பிற நாடுகள் கூடுதல் வரியை விதித்தால் அமெரிக்காவும் அதிக இறக்குமதி வரி விதிக்கும் என ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார். அதேபோல அதிபராக பொறுப்பேற்றதும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதைத் தொடர்ந்தால் தனது தலைமையிலான நிர்வாகம் அதே அளவிலான வரியினை இந்திய பொருட்களின் மீது விதிக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இந்த நிலையில் தான் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ட்ரம்ப் சந்திப்பு நடைபெறுகிறது.
புவிசார் அரசியல் சீரமைப்பு, வர்த்தக உறவு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் குறித்து இரு தேச தலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் அங்கிருந்து புறப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. வரும் சனிக்கிழமை அந்த விமானம் அமிர்தசரஸ் வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் அடுக்கிய கேள்விகள்: இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதற்கு முன்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
‘அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை தாயகம் அழைத்துவர சொந்த விமானத்தை அனுப்புவது குறித்து பேசுவாரா? இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கை, கால்களில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்தியாவின் ஒட்டு மொத்த கோபத்தை அதிப்ர் ட்ரம்பிடம் தெரிவிக்கும் தைரியம் பிரதமருக்கு உள்ளதா?’ என்று அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும், எச்1பி விசாவில் அமெரிக்கா சென்றவர்கள் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இந்திய இளைஞர்கள். இவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என ட்ரம்பிடம், மோடி கூறவாரா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.