தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணைகளில் இருந்து வடகால் மற்றும் தென்கால் வழியாக 53 பாசனக் குளங்கள் நிரம்புவதோடு இவற்றின் மூலம் சுமார் 40,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல் மற்றும் வாழையே முக்கிய சாகுபடிப் பயிராக உள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தாமிரபரணி ஆறு திகழ்கிறது. இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறையினால் முப்போக சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தற்போது ஒரு போக சாகுபடிக்கே போராடி தண்ணீரைப் பாசனத்திற்காகப் பெரும் நிலையில் உள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0012.jpg)
இதனால், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு மருதூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஆய்வு செய்தனர். இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொருநை நதிநீர் மேலாண்மை சங்கத் தலைவர் கண்ணனிடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நீர் ஆதாரமாக மருதூர் தடுப்பணை விளங்குகிறது. இதில் கடைமடை பகுதியாக விளங்கும் சாத்தான்குளம், உடன்குடி, புத்தன்தருவை பகுதிகளிலுள்ள குளங்கள் முழுக்கொள்ளவை எட்டாத நிலை நீடித்து வரும் நிலையில், கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முயற்சிப்பது தவறானது. ஏற்கெனவே மருதூர் மேலக்கால் மற்றும் கீழக்கால் மூலம் 29 குளங்கள் மூலம் 19,500 ஏக்கள் பாசன வசதி பெறுகின்றன. முப்போக விளைச்சல் குறைந்து ஒரு போகத்திற்கே தள்ளாடி வருகிறோம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/IMG-20250213-WA0011.jpg)
இதனால், ஒவ்வொரு குளங்களிலும் கார் சாகுபடி என்கிற ஜூன் முதல் நவம்பர் வரை சாகுபடி செய்யப்படுவதில்லை. செப்டம்பர் அல்லது அக்டோபரில்தான் கார் சாகுபடிக்காக மருதூர் மேலக்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது சிப்காட் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் தற்போது நடக்கும் ஒரு போக சாகுபடியும் விளைவிக்க முடியாமல் போகும். அதனால் சிப்காட்டிற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் திட்டம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டாலும், நிரந்தரமாக இத்திட்டத்தை கைவிடக்கோரி, அனைத்து விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.