‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘சக்கப் போடு போடு ராஜா’ போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சேதுராமன். சரும மருத்துவப் படிப்பை முடித்த சேதுராமன் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார்.
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபல சரும மருத்துவராக வலம் வந்த இவர் 2016 ஆம் ஆண்டு உமா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவது முறையாக உமா கர்ப்பமாக இருந்தபோது கடந்த 2020 ஆண்டு இளம் வயதில் மாரடைப்பால் சேதுராமன் மரணமடைந்தார். அப்போது அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் அவர்களின் 9-வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு சேதுராமன் குறித்து உருக்கமானப் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Snapinst_app27721922223756888959066822416302162790560792n1080.jpg)
அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “2015 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி இருவரும் சந்தித்தப்போது இந்த பயணம் தொடங்கியது. இந்த உறவிற்கு நீங்கள்(சேதுராமன்) முடிச்சுப்போட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகின்றன. எல்லா திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. ஆனால் எங்களுடைய திருமணம் அப்படியானதுதான் என்று நான் நம்புகிறேன். தன்னை தானே நேசிக்க கூடியவர், மென்மையானவர், நேர்மையானவர், தனித்துவமான ஆளுமைக் கொண்டவர்தான் சேது.
உங்கள் அன்பை பகிர்ந்துகொள்ள எனக்கு இன்னும் பல ஆண்டுகள் கிடைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் என்னைக் கவனித்துக் கொள்ள அழகான இரண்டு குழந்தைகளையும், மருத்துவமனையையும் விட்டு சென்றிருக்கிறீர்கள். நாம் ஒன்றாக இருந்த அந்த அழகான 4 ஆண்டுகளை நான் எப்போதும் போற்றுவேன். எங்களுக்குள் சின்னச் சின்ன சண்டைகள் கூட நடந்திருக்கிறது. ஆனாலும் அவை எங்களை ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள வைத்திருக்கிறது.
உங்களிடம் எனக்கு பிடித்த விஷயமே எல்லோரையும் சுயமரியாதையாக நடத்துவதுதான். அந்தக் குணத்துக்காகத்தான் இன்னும் உங்களை நிறைய பேர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு அங்கமாக நான் இருந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். 9-வது திருமண நாள் வாழ்த்துக்கள்” என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.