நியூயார்க்: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் பூமிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 8 நாள் பயணமாக விண்வெளி சென்ற அவர், அங்கு 8 மாதங்களாக சிக்கியுள்ளார்.
தனியார் ஊடக நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பூமி திரும்புவதை நாசாவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். மார்ச் 12-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் (க்ரூ-10) பூமியில் இருந்து புறப்படுகிறது. அந்த விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்துடன் டாக் (இணைப்பு) ஆனதும், அதே விண்கலனில் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புகிறார்.
இப்போது சர்வதேச விண்வெளி மையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் உள்ளார். அவர் அந்த பொறுப்புகளை வேறொருவர் வசம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து விடைபெற உள்ளார். டிராகன் விண்கலன் மூலம் மார்ச் 19-ம் தேதி அன்று அங்கிருந்து அவர் புறப்படுகிறார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு விரிந்து கொண்டு வர வேண்டும் என மஸ்க் வசம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தான் சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வருகிறது.
8 நாள் பயணம் 8 மாத கால பயணமாக மாறியது எப்படி? – கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஜூன் 6-ம் தேதி அடைந்தனர். அப்போது முதல் அவர்கள் இருவரும் அங்கேயே உள்ளனர்.
அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்தது. விண்வெளி மையத்தில் சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்பாதியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.