வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அனைவரையும் திரும்ப அழைத்துக்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “மற்ற நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கு இருக்க எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, உண்மையிலேயே இந்தியாவின் குடிமக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கிறார்கள் என்றால், அவர்களை மீண்டும் அழைத்துச் செல்ல இந்தியா தயாராக உள்ளது என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.
மேலும், நாங்கள் இதோடு நிற்கவில்லை. இவ்வாறு சட்டவிரோதமாக தங்குபவர்கள் சாதாரண குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய கனவுகள் காட்டப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். இதன் பின்னணியில் மனிதக் கடத்தல் உள்ளது. மனித கடத்தலின் முழு அமைப்பையும் நாம் அகற்ற வேண்டும். மனித கடத்தல் முடிவுக்கு வரும் வகையில், இதற்கான சூழல் அமைப்பை அதன் வேரில் இருந்து அகற்ற அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த அமைப்புக்கு எதிரானது எங்கள் போராட்டம். இந்த முயற்சியில் அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் சமீபத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த அவர்கள், பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது. அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று குறிப்பிட்டிருந்தது இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
அப்போது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மோடி சந்திக்கும் முன்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவு ஒன்றில், ” “அதிபர் ட்ரம்ப்பை சந்திக்கும் பிரதமர் மோடி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை தாயகம் அழைத்துவர சொந்த விமானத்தை அனுப்புவது குறித்து பேசுவாரா? இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கை, கால்களில் விலங்கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இந்தியாவின் ஒட்டு மொத்த கோபத்தை அதிப்ர் ட்ரம்பிடம் தெரிவிக்கும் தைரியம் பிரதமருக்கு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் கூறியது என்ன? – வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “2017-ஆம் ஆண்டில், எனது நிர்வாகம் குவாட் பாதுகாப்பு கூட்டாண்மையை புதுப்பித்து வலுப்படுத்தியது. இந்தோ – பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையேயான வலுவான ஒத்துழைப்பை பிரதமரும் நானும் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இது இந்தோ – பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானது.
பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இங்கேயும் இந்தியாவிலும் நிறைய நேரம் ஒன்றாகச் செலவிட்டோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அழகான நாட்டுக்கு (இந்தியாவுக்கு) நான் பயணம் செய்தேன். அது ஒரு நம்பமுடியாத அனுபவம். உலகின் பழமையான மற்றும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு சிறப்பு பிணைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. இன்று, பிரதமரும் நானும் எங்கள் உறவை மேலும் வலுப்படுத்த ஒரு கட்டமைப்பை அறிவிக்கிறோம்.
பிரதமரும் நானும் எரிசக்தி தொடர்பான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். இது அமெரிக்கா, இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் முன்னணி சப்ளையராக இருப்பதை உறுதி செய்கிறது. அதோடு, அமெரிக்க அணுசக்தித் துறையின் புரட்சிகர வளர்ச்சியில், இந்திய சந்தையில் அமெரிக்க அணு தொழில்நுட்பத்தை மிக உயர்ந்த மட்டத்தில் கொண்டு செல்ல உள்ளோம். இதற்கேற்ப, இந்தியா அதன் சட்டங்களை சீர்திருத்துகிறது.
மிகப் பெரிய வர்த்தக பாதைகளில் ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் இணைந்து பணியாற்றவும் ஒப்புக்கொண்டுள்ளோம். இந்த வழித்தடம் இந்தியாவிலிருந்து இஸ்ரேல் வரையிலும், பின்னர் இத்தாலி மற்றும் அமெரிக்காவுக்கும் செல்லும். சாலைகள், ரயில்வே மற்றும் கடலுக்கடியில் கேபிள்கள் மூலம் எங்கள் நட்பு நாடுகளை இது இணைக்கும். இது ஒரு பெரிய வளர்ச்சியாக இருக்கும்” என்று கூறினார்.