முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில் துறை, அமைச்சர் பொன்முடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை அடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மே 7-ம் தேதி பொறுப்பேற்றது. அதுமுதல், அவ்வப்போது அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2024 செப்டம்பரில் 5-வது முறையாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானார். அமைச்சராக செந்தில் பாலாஜி, சா.மு.நாசர், ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக பொறுப்பேற்றனர். ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதவிர, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 6-வது முறையாக அமைச்சரவை பொறுப்புகள் நேற்று மாற்றப்பட்டுள்ளன.
‘முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் இருந்த காதி, கிராம தொழில்கள் வாரியம், வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்படுகிறது’ என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.