ஐ.பி.எல் தொடக்க தேதியை திடீரென மாற்றிய பி.சி.சி.ஐ – காரணம் என்ன?

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக (கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்கும் என சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மார்ச் 23ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த ஆட்டம் மாலை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடரின் 2வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி (மே 25ம் தேதி) ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடைபெறும் எனவும், முதலாவது தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. ஒளிபரப்பு நிறுவனங்களில் கோரிக்கையை ஏற்று ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.