“கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது திமுக அரசு!” – அண்ணாமலை

கோவை: “தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என எங்கும் பெண்கள் மற்றம் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக அரசு கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ்புரம் தபால் நிலையம் அருகே இன்று மாலை நடந்தது. பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஸ்வி சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது:

“கோவையில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது தீவிரவாத தாக்குதல். ஆனால் தமிழக முதல்வர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் என தொடர்ந்து கூறி வருகிறார். தமிழகத்தில் பேருந்து, பள்ளி, கல்லூரி என பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை. காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அரசு கடைசி ஓராண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமான தீவிரவாதியை இந்தியா கொண்டு வர அதிபர் ட்ரம்ப்பிடம் அனுமதி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் வேட்டையாடி கொண்டு வருவோம். பாஜக கட்சி ஒரு சமுதாயத்துக்கான கட்சி அல்ல. இந்திய கலாச்சாரத்துக்கு ஆதரவான கட்சியாகும். அனைவரும் மே 21-ம் தேதி பயங்கரவாதத்துக்கு எதிரான சங்கல்பத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று அவர் பேசினார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசும்போது, “குண்டுவெடிப்பு சம்பவம் கோவை வளர்ச்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து கூறாதவர் முதல்வர் ஸ்டாலின். திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்து மதம் பிரிவினை ஏற்படுத்துகிறது என்று உலகில் எங்கு சென்று கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, பொருளாளர் எஸ்.ஆர். சேகர், பொதுச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஆர்எஸ்எஸ் மாநகர தலைவர் ராஜா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.