‘கதவுகளுக்குப் பின்னால்…’ – இந்தியர்கள் அவமதிப்பு விவகாரத்தில் மோடி மீது சசி தரூர் விமர்சனம்

புதுடெல்லி: இந்தியர்களை யாரும் அவமதிக்க முடியாது என பூட்டிய கதவுகளுக்கு பின்னால் பிரதமர் மோடி, அமெரிக்கர்களிடம் தெரிவித்திருப்பார் என தான் நம்புவதாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இன்வெஸ்ட் கர்நாடகா மாநாட்டுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பூட்டிய கதவுகளுக்கு பின்னால் அவர் (மோடி) அமெரிக்கர்களிடம், நீங்கள் எங்கள் மக்களை அவமானப்படுத்த முடியாது என்று கூறியிருப்பார். நீங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பலாம். அவர்கள் சட்டவிரோதமானவர்கள். அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அவர்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களின் கை, கால்களில் விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அனுப்பாதீர்கள். அது சரியில்லை என்று பூட்டிய கதவுகளுக்கு பின்னால் அவர் (மோடி) கூறியிருக்கலாம். யாருக்குத் தெரியும்.

இன்று அவர்கள் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, உக்ரைன் போர் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர்களுக்குள் சிறந்த உரையாடல் நடந்ததாக தெரிவித்திருந்தனர். டொனால்டு ட்ரம்ப் போன்ற ஒருவரை, அவரது பாதுகாப்புச் செயலாளர் வியாழக்கிழமை உலகின் மிகச் சிறந்த நேகோஷியேட்டர் (Negotiator) என்று தெரிவித்தார், அவரை விட இந்திய பிரதமர் மிகச் சிறந்த நெகோஷியேட்டர் என அறிவித்தார். சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் வல்லவர் என்ற இந்தக் கருத்து, பிரதமர் மோடி வங்கிகளில் பாதுகாத்து வைத்துக்கொள்ளும் ஒன்றாகவே தெரிகிறது.

இந்தியாவில், குறிப்பாக பாஜக ஆளும் சில பகுதிகளில் அதிகமான மற்றும் சில நம் வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையிலான வரிகள் உள்ளன. அதற்கு அவர்கள், “இந்திய தொழில்துறையை பாதுகாக்க வேண்டும்” என்கிறார்கள். ஆனால் அமெரிக்கர்களோ, “நாங்கள் உங்களுக்கு பொருள்களை விற்க விரும்புகிறோம். அதற்கான சந்தையை நீங்கள் சாத்தியமாக்க வேண்டும்” எனக் கூறுகிறார்கள்.

மிகத் தெளிவாக நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சில பொருள்களில் அமெரிக்கர்களின் பரஸ்பர வரிகள் நமது ஏற்றுமதியாளர்களுக்கு சாதகம் இல்லாமலிருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. நமது ஏற்றுமதி அதிகரிக்காமல் இந்தியாவின் பொருளாதாரமும் வளராது. அதற்கு அமெரிக்காவுடன் எவ்வாறு ஓர் ஆக்கப்பூர்வமான ஒப்பந்தத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

அது ஒரு முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த ஒப்பந்தம் நமது பொருள்களை அவர்களுக்கு விற்க ஒரு வாய்ப்பை உருவாக்கலாம். அதற்கு பதிலாக நாம் இங்கு தயாரிக்காத சில பொருள்களை அமெரிக்கர்கள் இங்கே விற்கலாம். நிச்சயம் நாம் ஒருவழியை கண்டுபிடித்தாக வேண்டும். அடுத்த 9 மாதங்களுக்கு யார் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்வது என்பதே அதன் பொறுப்பாக இருக்கும்” என்று சசி தரூர் தெரிவித்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களையே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், எரிசக்தி உள்ளிட்டவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். செயற்கை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்திய, சீன எல்லை பகுதிகளில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. வங்கதேச விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. அந்த பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடியே கையாள்வார். தூதரக ரீதியில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் என்னைவிட பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர். அவருக்கு இணை யாருமே கிடையாது” என்றார் ட்ரம்ப்.

அந்த நிகழ்வில் பிரதமர் மோடி, “கடந்த 2008-ம் ஆண்டு மும்மையில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்த அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூறுகிறேன்” என்றார். மேலும், “உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. நாங்கள் எந்த பக்கமும் சாய்வது கிடையாது. எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறோம்” என்றார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “மற்ற நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கு இருக்க எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, உண்மையிலேயே இந்தியாவின் குடிமக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கிறார்கள் என்றால், அவர்களை மீண்டும் அழைத்துச் செல்ல இந்தியா தயாராக உள்ளது என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.

மேலும், நாங்கள் இதோடு நிற்கவில்லை. இவ்வாறு சட்டவிரோதமாக தங்குபவர்கள் சாதாரண குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய கனவுகள் காட்டப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். இதன் பின்னணியில் மனிதக் கடத்தல் உள்ளது. மனித கடத்தலின் முழு அமைப்பையும் நாம் அகற்ற வேண்டும்.

மனித கடத்தல் முடிவுக்கு வரும் வகையில், இதற்கான சூழல் அமைப்பை அதன் வேரில் இருந்து அகற்ற அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த அமைப்புக்கு எதிரானது எங்கள் போராட்டம். இந்த முயற்சியில் அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுந்தபோது, “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கை, கால்களில் விலங்கிடுவது அந்த நாட்டின் சட்டம். எனினும் இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது அவர்களை கண்ணியமாக நடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.