சாம்பியன்ஸ் டிராபியை தொடரை வென்றால் எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்?

ICC Champions Trophy 2025: பலரும் எதிர்பார்த்து காத்திருந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்திய அணி மட்டும் அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும், இந்திய அணி அரையிறுதிக்கோ, இறுதிப்போட்டிகோ தகுதி பெற்றாலும் அந்த போட்டிகள் துபாய் மைதானத்தில்தான் நடைபெறும் என முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும்; 2வது பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். குரூப் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெறுகிறது.

ICC Champions Trophy 2025: இதுவரை சாம்பியன் பட்டம் வென்றவர்கள்

கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை தட்டித்தூக்கியது. இந்திய அணி இதுவரை 2 முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளன. 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் கோப்பையை கைப்பற்றியது அனைவருக்கும் தெரியும். அதேபோல், 2002இல் இலங்கை அணியுடன் கோப்பையை இந்திய அணி பகிர்ந்துகொண்டது. இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதலில் இந்த தொடர் ஐசிசி நாக்-அவுட் கோப்பை என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் பெயர் மாற்றம் பெற்று சாம்பியன்ஸ் டிராபி என அழைக்கப்படுகிறது. வங்கதேசத்தில் 1998ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் தொடர் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, 2000இல் நியூசிலாந்து, 2004இல் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் வென்றன. தொடர்ந்து 2006 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியை வென்றால் எவ்வளவு கிடைக்கும்?

இந்நிலையில், இந்தாண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றால் வழங்கப்படும் பரிசுத் தொகை (Prize Amount) விவரத்தை ஐசிசி இன்று அறிவித்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை வெல்லும் அணிக்கு இம்முறை 2.24 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.19.4 கோடி) பரிசுத்தொகையாக கிடைக்கும். அதாவது, 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட இது 53% அதிகமாகும். அதேபோல், 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9.72 கோடி) மற்றும் 3வது மற்றும் 4வது இடம்பிடிக்கும் அணிக்கு 5,60,000 அமெரிக்க டாலர் (ரூ.4.86 கோடி) பரிசுத்தொகையாக கிடைக்கும்.

ICC Champions Trophy 2025: அனைத்து போட்டிகளையும் வென்றால் ஜாக்பாட் தான்… 

குரூப் சுற்றில் வெற்றி பெறும் அணிக்கு 34 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. 5வது மற்றும் 6வது இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு 3,50,000 அமெரிக்க டாலரும், கடைசி இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு 1,40,000 அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக கிடைக்கும். மேலும், பங்குபெறும் அணிகளுக்கு தலா 1,25,000 அமெரிக்க டாலர் கிடைக்கும். அதுமட்டுமின்றி தொடர்ந்து அனைத்து போட்டிகளையும் வென்று, கோப்பையையும் வெல்லும் அணி ஒட்டுமொத்தமாக ரூ.22 கோடி வரை வருமானம் ஈட்டும். 

மேலும் படிக்க | ரிஷப் பந்துக்கு இந்திய அணியில் இடமில்லை – பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஓபன் டாக்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.