சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கினார். அவர் கட்சித் தொடங்கி சில மாதங்களிலேயே மக்களவைத் தேர்தல் வந்தாலும் கூட அதில் போட்டியும் இல்லை யாருக்கும் ஆதவும் இல்லை என்ற நிலைப்பாட்டுடன் இயங்கத் தொடங்கினார்.
தொடர்ச்சியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் – விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் அவருடைய பேச்சு கவனம் பெற்றது. முதல் மாநாட்டிலேயே ஆளும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். ஆனால் மத்திய அரசை அதே வீச்சுடன் அவர் விமர்சிக்கவில்லை. அன்று அவர் பேசியவிதம், தொடர்ந்து அவர் காட்டும் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு ஆகியன அவர் பாஜகவின் நிழலில் செயல்படுகிறார் என்ற விமர்சனங்களையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார். அவருடைய அரசியல் நகர்வுகள் அவர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரம் கொண்டுள்ளதைக் காட்டுகிறது.
விஜய் அறையிலிருந்து கொண்டே அரசியல் செய்கிறார் என்று அவர் மீதான விமர்சனங்கள் தற்போது வலுக்கும் சூழலில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு ‘ஒய்’ (Y) பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமிழகத்துக்குள் விஜய் எங்கு சென்றாலும் அவருடன் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது.