மதுரை: திருப்பரங்குன்றம் மலை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிடம் மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, பிப்ரவரி 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் திட்டமிட்டு, அதற்கான அழைப்பை விடுத்தன. இதற்கு, மதுரை மாநகரக் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். மாவட்ட நிர்வாகமும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5 முதல் 6 வரை 1 மணி நேரம் மட்டும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வெறுப்புணர் வுடனும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தது.
ஆர்ப்பாட்த்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மோதலை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி ஹெச்.ராஜாவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து நேற்று மாலை பாஜக வழக்கறிஞர்கள் ஆனந்த பத்மநாபன், மலையேந்திரன் மற்றும் மாநகர் மாவட்டத் தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோருடன் காவல் நிலையத்தில் மாலை 5 மணிக்கு ஹெச்.ராஜா ஆஜரானார்.
பின்னர், ஹெச்.ராஜாவிடம் காவல் உதவி ஆணையர் கணேசன், ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மீண்டும் வரும் 16-ம் தேதி ஆஜராக வேண்டும் என காவல் துறையினர் உத்தர விட்டனர்.
ஹெச்.ராஜா செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘போலீஸார் கேட்ட கேள்வி களுக்கு விளக்கங்களை அனுப்பு வதாகக் கூறியுள்ளேன். மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சி தலைவராக பங்கேற்கவில்லை. ஓர் இந்துவாகவே பங்கேற்றேன்’ என்றார்.