மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை எடப்பாடியார் வழியில் மேற்கொள்வோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “எங்களை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே பொதுச்செயலாளர், முதல்வர். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அவர் மேற்கொள்வார். அவரது வழியில் நாங்களும் பணியாற்றுவோம். திமுக ஆட்சியில், வழக்கில் இருப்பவர்களுக்கு கூடுதல் அமைச்சரவை இடம் தருகின்றனர். முதல்வரின் சாட்டை சுழற்றுவது இப்படித்தானா?
தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய் ’பிரிவு பாதுகாப்பு கொடுத்தது என்பது அவர் பிரபலமான நடிகர். மக்கள் செல்வாக்கு அதிகமுள்ளவர். இளைஞர்கள் பட்டாளம் அவருக்கு உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இன்றும் நான் எனது மனைவியை காதலிக்கிறேன். எங்கு சென்றாலும் அவரையும் அழைத்துச் செல்கிறேன். எனது குழந்தைகள் மீது அன்பு செலுத்துகிறேன்.
என்னை போன்று அனைவரும் அவர்களது மனைவியை காதலிக்க வேண்டும்” என நகைச்சுவையாக அவரது பாணியில் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த பேட்டியின்போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கும் போது, ஓ.பன்னீர்செல்வத்தை அண்ணன் என்றும், டிடிவி தினகரனை சார் எனவும் குறிப்பிட்டார்.