பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் தெரிவித்தார்.
பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக 2019 மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்தது. இந்நிலையில், புதிய ரயில் பாலம் மற்றும் ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமேசுவரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முழுமையாக பணிகள் நிறைவடைந்து, ஆகஸ்ட் மாதம் ராமேசுவரம் ரயில் நிலையத்தை திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா ஒரு மாதத்துக்குள் நடைபெறும். திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். திறப்பு விழாவுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
பழைய பாம்பன் ரயில் தூக்குப் பாலம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு, அதை காட்சிப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாம்பன் புதிய ரயில் பாலம் திறந்த பின்னர் ராமேசுவரத்துக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவது மற்றும் அதிவிரைவு ரயில்கள் மண்டபம் மற்றும் பரமக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்வது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.