Doctor Vikatan: என் வயது 22. இன்னும் திருமணமாகவில்லை. நான் இத்தனை வருடங்களாக பீரியட்ஸின்போது நாப்கின்தான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். இப்போது என் தோழிகளில் பலரும் நாப்கினுக்கு பதில் மென்ஸ்ட்ருவல் கப்புக்கு மாறிவிட்டனர். அதனால் நானும் அதை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால், திருமணமாகாத பெண்கள் இவற்றை உபயோகிக்கக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையா…?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
திருமணமாகாத பெண்கள் மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிப்பதைத் தவிர்ப்பதே நல்லது. உபயோகிக்க எளிதாக இருப்பதால், இன்று இளம் பெண்கள் பலரும், மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்கிறார்கள். அதைப் பல மணி நேரம் அப்படியே வெஜைனாவின் உள்ளேயே வைத்திருக்கிறார்கள். அகற்றவோ, சுத்தப்படுத்தவோ மறந்துவிடுகிறார்கள்.
மென்ஸ்ட்ருவல் கப், நீண்ட நேரத்துக்கு இப்படி வெஜைனா உள்ளேயே இருக்கும்போது, தேவையற்ற இன்ஃபெக்ஷன்களுக்கு காரணமாகும். மாதவிடாய் ரத்தமானது அந்த கப்பில் சேகரமாகும். அது பல மணி நேரம் அப்படியே இருக்கும் நிலையில், கர்ப்பப்பையின் வழியே தொற்றானது அருகிலுள்ள உறுப்புகளையும் தாக்கும். மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிப்பவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை அதை வெளியே எடுத்துக் கழுவி, முறையாக சுத்தம் செய்த பிறகே மீண்டும் உபயோகிக்க வேண்டும்.
திருமணமாகாத பெண்களுக்கு நாங்கள் பொதுவாக இவற்றைப் பரிந்துரைப்பதில்லை. மென்ஸ்ட்ருவல் கப் என்பதும் ஒருவகையில் அந்நிய பொருள்தான். அது வெஜைனாவின் பிஹெச் அளவை மாற்றிவிடும். அதாவது அமிலத்தன்மை உள்ள சூழலில் இருந்து காரத்தன்மை உள்ள சூழலுக்கு மாறும். அதனால்தான் இன்ஃபெக்ஷனும் வரும்

மென்ஸ்ட்ருவல் கப்பை சரியாகச் சுத்தம் செய்யாவிட்டாலும் தொற்று பாதிக்கும். திருமணமாகாத பெண்கள் மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிப்பதால் அவர்களுக்கு வெஜைனா பகுதியானது தளர்ந்து, லூசாகும் வாய்ப்புகளும் உண்டு. இது பிற்காலத்தில் அவர்களது தாம்பத்திய உறவை பாதிப்பது உண்டு.
மென்ஸ்ட்ருவல் கப் போலவே டாம்பூன் உபயோகிக்கும் வழக்கமும் சமீபகாலமாக இளம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. இதுவும் ஒருவகை அந்நிய பொருளே. ஸ்பான்ஜ் போன்ற இதை வெஜைனாவுக்குள் பொருத்திக் கொண்டால், ப்ளீடிங்கை நன்றாக உறிஞ்சிக் கொள்ளும். ரத்தத்தை உறிஞ்சிய நிலையில் நீண்ட நேரம் வெஜைனாவுக்குள் இருப்பதால், இதுவும் இன்ஃபெக்ஷன் ஏற்பட காரணமாகும். அரிதாக சிலருக்கு ‘டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்’ (Toxic Shock Syndrome) என்ற பாதிப்பையும் இவை ஏற்படுத்தலாம். திடீர் காய்ச்சல், குளிர், தலைவலி உள்ளிட்ட பல பிரச்னைகளை இந்த சிண்ட்ரோம் ஏற்படுத்தலாம். எனவே, நமது உடல்வாகுக்கு எது பொருந்தும் என்பதைப் பார்த்து உபயோகிப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.