அமிர்தசரஸ்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த விமானம் சனிக்கிழமை (பிப்.15) பின்னிரவு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமலும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறார் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அந்த வகையில் கடந்த 5-ம் தேதி சி-17 என்ற ராணுவ விமானத்தில் நேற்று 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் கை மற்றும் கால்கள் விலங்கிட்ட நிலையில் அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 116 இந்தியர்கள் தாயகத்துக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. இரவு 10 மணிக்கு அவர்களது விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 11.30 மணி அளவில் அந்த விமானம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
இதில் 65 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள். 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். கோவா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் ஜம்மு காஷ்மீர், இமாச்சல் மாநிலத்தை சேர்ந்த தலா ஒருவர் தாயகம் வந்துள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் அமெரிக்காவுக்கு சென்ற பிரதமர் மோடி, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைத்துக்கொள்ள தயார் என உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.