அமெரிக்கா- இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு: ஒப்பந்தங்கள் கையெழுத்து

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கடந்த 12-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றார். கடந்த 13-ம் தேதி அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ், தொழிலதிபர் எலன் மஸ்க், விவேக் ராமசாமி உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம், கல்வி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது:

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ஹூசைன் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார். அவர் இந்தியாவில் நீதி விசாரணையை எதிர்கொள்வார். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும்.

இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக அமெரிக்காவின் அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களையே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், எரிசக்தி உள்ளிட்டவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். செயற்கை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.

இந்திய, சீன எல்லை பகுதிகளில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. வங்கதேச விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. அந்த பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடியே கையாள்வார். ராஜ்ஜியரீதியில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் என்னைவிட பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர். அவருக்கு இணை யாருமே கிடையாது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் என்பது அதிபர் ட்ரம்பின் குறிக்கோள். இதேபோல வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் உறுதியேற்று உள்ளோம்.

வரும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக (ரூ.43.43 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் சிறிய அணு உலைகளை அமைப்பது தொடர்பாக அதிபர் ட்ரம்புடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினேன்.

இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்பு துறையில் இருநாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும். பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும்.

செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர், குவாண்டம், உயிரி தொழில்நுட்பம், மருந்துகள் உற்பத்தி- விநியோகம், லித்தியம் உள்ளிட்ட கனிமங்களை கண்டறிவது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். விண்வெளித் துறையில் இந்தியா, அமெரிக்கா இடையே நெருங்கிய உறவு நீடிக்கிறது. இ‍ஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்படும்

இந்திய, பசிபிக் கடல் பகுதிகளில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா அடங்கிய குவாட் கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட (ஐஎம்இசி) உள்கட்டமைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் (ஐ2யு2) கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும்.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்படும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2008-ம் ஆண்டு மும்மையில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்த அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூறுகிறேன்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகம் எங்கள் உறவில் முக்கிய இணைப்பாகும். இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் புதிய இந்திய தூதரகங்கள் திறக்கப்படும். இந்தியாவில் கல்வி வளாகங்களைத் திறக்க அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அழைப்பு விடுக்கிறேன்.

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. நாங்கள் எந்த பக்கமும் சாய்வது கிடையாது. எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறோம். கடந்த 2020 -ம் ஆண்டில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை வந்தார். அவர் மீண்டும் இந்தியாவுக்கு வருகை தர 140 கோடி இந்தியர்களின் சார்பில் அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ட்ரம்ப்- மோடி நட்புறவு: பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ட்ரம்ப் புத்தகத்தை பரிசாக அளித்தார். அதன் அட்டையில், “மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், நீங்கள் மிகச் சிறந்தவர்” என்று எழுதப்பட்டு உள்ளது. அதோடு ட்ரம்பின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கிறது. மேலும் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் சந்திப்புகளின்போது எடுத்த புகைப்படங்களை தொகுத்து புதிய புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தகத்தையும் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களின் சந்தித்தபோது ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் மோடிக்காக அதிபர் ட்ரம்ப் நாற்காலியை கைகளால் இழுத்த வீடியோ இருவர் இடையிலான அன்பை பறைசாற்றுகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு 36 எப்35 ரக போர் விமானங்கள்: அமெரிக்காவின் அதிநவீன எப்35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவுக்கு 36 எப்35 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா முன்வந்திருக்கிறது. இந்த விமானத்தில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 2,800 கி.மீ. தொலைவு வரை தரையிறங்காமல் பறக்க முடியும். ஒரு எப் 35 ரக போர் விமானத்தை தயாரிக்க ரூ.715 கோடி செலவாகிறது. இது உலகத்தின் மிகச் சிறந்த போர் விமானம் ஆகும். மிக நெருங்கிய நட்பு நாடுகளுக்கு மட்டுமே எப்35 ரக போர் விமானத்தை அமெரிக்கா வழங்கும்.

தற்போது பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகளிடம் மட்டுமே எப்35 ரக போர் விமானங்கள் உள்ளன.

தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் எப்35 போர் விமானங்களை வாங்க அமெரிக்காவிடம் விருப்பம் தெரிவித்தன. ஆனால் இந்த நாடுகளுக்கு எப்35 விமானங்களை வழங்கினால் விமானத்தின் வடிவமைப்பு சீனாவுக்கு கைமாறக்கூடும் என்பதால் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. தற்போது இந்தியாவுக்கு எப்35 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பது சீனா, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று சர்வதேச பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.