வாஷிங்டன்,
அமெரிக்கா நாட்டின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து நாட்டின் வெளியுறவு மந்திரியாக மார்கோ ரூபியோ பதவியேற்றார். இந்தநிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா சார்பாக மார்கோ ரூபியோ கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ராணுவத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதன்படி வாஷிங்டனில் உள்ள ராணுவ முகாம் விமான தளத்தில் இருந்து அவருடைய விமானம் புறப்பட்டது. அமெரிக்கா எல்லைக்குட்பட்ட பகுதியில் நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட விமானிகள் அந்த விமானத்தை மீண்டும் வாஷிங்டனில் பத்திரமாக தரையிறக்கினர். இதனை தொடர்ந்து ரூபியோவின் வெளிநாடு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வேறு விமானம் மூலமாக அவர் விரைவில் ஜெர்மனி செல்வார் என அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.