மதுரை: “ஒரு பகுதியில் அதிகமாகவும், மற்றொரு பகுதியில் குறைவாகவும் ஏற்ற, இறக்கத்துடன் வரிகள் விதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. அரசு நிர்ணயித்தபடி வரி விதிப்பு சீராக இருக்க வேண்டும்” என நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று நடந்தது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி, கீதாஜீவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியது: “நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்கவே உள்ளாட்சித் தலைவர்களையும், அதிகாரிகளையும் அழைத்து இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதிகாரிகளும், உள்ளாட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து திமுக ஆட்சி தொடர சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
வரி விதிப்பில் சீரான நிலை இல்லை என்றும், சில இடங்களில் மிக அதிகமாக வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். வரி விதிப்பு மேடு, பள்ளம் இன்றி சரியாக, சீராக இருக்க வேண்டும். அரசு நிர்ணயித்த வரியை சரியாக வசூலிக்க வேண்டும். குப்பை வரி 7 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசூலிக்கப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களில் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதி இருந்தால் நீண்ட காலம் சாலையை பயன்படுத்தலாம். அதற்கு தகுந்ததுபோல் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். எல்இடி தெருவிளக்குகள் ஏற்கெனவே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் 1 1/2 லட்சம் எல்இடி தெருவிளக்குகள் வழங்கப்பட உள்ளன. சாதாரண தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்ற வேண்டிய இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் புதிய இடங்களில் பேருந்துநிலையம், மார்க்கெட் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். உள்ளாட்சிக்கு வருவாய் தரக்கூடிய இடமாக இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக பணிகள் தொடங்கப்படும். வளர்ச்சித் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப் பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்” என்று அமைச்சர் பேசினார்.