பெங்களூரு: கர்நாடகாவின் பெலகாவியில் இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் ஆட்டோ டிரைவர் ஒருவரால் அறைந்த பின், சிறிது நேரம் கழித்து படிகளில் ஏறியபோது கீழே விழுந்து கோவா முன்னாள் எம்எல்ஏ லாவூ சூர்யாஜி மம்லேதார் (68) உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கர்நாடக போலீஸாரின் கூற்றுப்படி, மம்லேதார் பெலகாவியின் காடே பஜாரில் உள்ள ஸ்ரீனிவாசா லாட்ஜில் ஓர் அறையை முன்பதிவு செய்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள குறுகிய சந்தில் அவரின் கார் நுழைந்தபோது, அது ஒரு ஆட்டோவில் இடித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ டிரைவருக்கும், முன்னாள் எம்எல்ஏவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு இது சிறிய மோதலாக மாறியது. அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மம்தாரை அறைந்துள்ளார். அதன்பின்னர் முன்னாள் எம்எல்ஏ தான் பதிவு செய்த அறைக்குச் செல்ல படிகளில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்புக்கான காரணத்தை அறிய அவரது உடல், உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, மம்தாரை தாக்கிய ஆட்டோ டிரைவர் முஜாஹித் சனதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏவை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆட்டோ டிரைவரை போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து பெலகாவி டிசிபி ஜெகதீஸ் ரோகன் கூறுகையில், “இந்தச் சம்பவம் மம்லேதாரின் கார் ஆட்டோ ஒன்றின் மீது மோதியதைத் தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் உண்டான வாக்குவாதத்தின்போது ஆட்டோ டிரைவர் மம்லேதாரை கன்னத்தில் அடித்துள்ளார். பின்பு தனது அறைக்கு மம்லேதார் சென்றபோது நிலைகுலைந்து விழுந்துள்ளார். அங்குள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் 2 மணிக்கு இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்” என்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லாவூ சூர்யாஜி மம்லேதார் கடந்த 2012-2017-ல் கோவாவின் போண்டா தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.