உக்ரைன் அணு உலை மீது ட்ரோன் தாக்குதலா? – ரஷ்யா மறுப்பு

உக்ரைனின் செர்னோபில் அணு உலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார்.

சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனின் செர்னோபில் பகுதியில் கடந்த 1977-ம் ஆண்டில் அணு மின் நிலையம் திறக்கப்பட்டது. கடந்த 1986-ம் ஆண்டில் அந்த அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கதிர்வீச்சால் 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 4,000 பேர் வரை உயிரிழந்ததாகவும் சுமார் 50 லட்சம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு கடந்த 1991-ம் ஆண்டு ஆகஸ்டில் உக்ரைன் தனி நாடாக உதயமானது. தற்போது உக்ரைன் அரசு கட்டுப்பாட்டில் செர்னோபில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. உக்ரைன்- ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் செர்னோபில் அணு மின் நிலையத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாடுகள் எச்சரித்து உள்ளன.

இந்த சூழலில் செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்ய ட்ரோன்கள் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செர்னோபில் அணு மின் நிலையத்தின் 4-வது உற்பத்தி பிரிவின் மீது ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் கதிர்வீச்சை தடுக்கும் தடுப்பு சேதமடைந்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்வதேச அணு சக்தி அமைப்பு கூறும்போது, “செர்னோபில் அணு மின் நிலையத்தில் ஏதோ வெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனினும் கதிர்வீச்சு அளவு நிலையாக இருக்கிறது. இப்போதைய நிலையில் எவ்வித அச்சுறுத்தலும் இ்லலை” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரஷ்யா மறுப்பு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, “அணு மின் நிலையங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஒருபோதும் தாக்குதல் நடத்தாது. செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துகிறார். இது மிகப்பெரிய சதி. இந்த சதி திட்டத்தை உக்ரைன் அரசு அரங்கேற்றுகிறது” என்று தெரிவித்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள், நிதியுதவியை வழங்கி வந்தார். அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்திவிட்டார். மேலும் உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருப்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அமெரிக்கா கைவிட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை ஜெலன்ஸ்கி கோரி வருகிறார். அமெரிக்கா, ரஷ்யாவின் போர் நிறுத்த முயற்சிகளை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.