கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மேல்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள 66 வீடுகளை அகற்றும் பணியை உயர் நீதிமன்ற தடையால் அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மேல்பாக்கம் கிராமம் ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது.
இங்கு வனத்துறைக்கு சொந்தமாக உள்ள சுமார் 70 ஏக்கர் நிலத்தில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து 66 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ள இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என, கடந்த 2023-ம் ஆண்டு தனி நபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணையில், வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என, சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக கால அவகாசம் கொடுத்து, ஏற்கெனவே ஆக்கிரமிப்பு வீடுகளில் நோட்டீஸ் அளித்ததோடு, வீடுகளின் முகப்புகளிலும் நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிந்ததையடுத்து, நேற்று கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெய தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட போலீஸாரின் பாதுகாப்புடன் 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணக்குமாரி உள்ளிட்ட வருவாய்த் துறையினர், 8 பொக்லைன் இயந்திரங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் சகிதம், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மேல்பாக்கம் கிராமத்துக்கு வந்தனர்.
மேலும், வீடுகளின் மின் இணைப்புகள், குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஏதுவாக மின்சார வாரிய அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறையினரும் வந்தனர். இதனையறிந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தீர்வு எட்டப்படாத நிலையில், பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன், பாமகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் என, 27 பேரை போலீஸார் கைது செய்து, பாதிரிவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் பொக்லைன் மூலம் வீடுகளை அகற்ற முயன்றனர்.
அப்போது ஒரு வீட்டின் முகப்பு பகுதி மட்டும் இடிக்கப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து, அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், மேல்பாக்கம் கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், கைதானவர்களை மாலையில் போலீஸார் விடுவித்தனர்.