புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) இன்று மாலை துவங்கியது. இதை துவக்கி வைத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘அனைவருக்கும் வணக்கம்’ எனத் தமிழில் தெரிவித்தார்.
வாரணானாசியின் கங்கை கரையிலுள்ள நமோ காட்டில் இன்று கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சி தொடங்கியது. துவக்கத்தில், தமிழகக் கலைஞர்களின் நாதஸ்வரம், மேளதாள மங்கள இசை முழங்கியது. இந்நிகழ்ச்சியை மின்சாரப் பொத்தான் அழுத்தி உ.பி முதல்வர் யோகி துவக்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
கேடிஎஸ் 3.0-ஐ துவக்கி வைத்து உ.பி முதல்வர் யோகி உரை நிகழ்த்துகையில் பேசியதாவது: பிரதமரின் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் காசி தமிழ் சங்கமம் இங்கு தொடங்கப்படுவதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்வதன் ஒரு பகுதியாகும். இந்த சந்தர்ப்பத்தில், தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வந்துள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். முதல் இரண்டு சங்கமங்கள், புனித கார்த்திகை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன, ஆனால் மூன்றாவது சங்கமம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெறும் போது நிகழ்வது முக்கியமானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் காசியுடன் மகா கும்பமேளாவில் நீராடி, பகவான் ராமரை தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற உள்ளனர்.
மகா கும்பமேளாவில் நீராடி இந்தியாவை ஒன்றிணைக்க 51 கோடி பக்தர்கள் பாடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார். சாதி மற்றும் பிராந்திய பாகுபாடு இல்லாத இடத்தில், ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதம் காட்டப்படுகிறது. இது இதுவரை நடந்த மிகப்பெரிய நிகழ்வு. இந்த முறை, மகா கும்பமேளாவின் ஏற்பாட்டில், காசி தமிழ் சங்கத்துடன் இணைந்த அனுபவத்தைப் பெறுகிறது. இந்த முறை கருப்பொருளாக மகரிஷியான அகத்தியர் முன்னிறுத்தப்பட்டு உள்ளார். மகரிஷி அகஸ்தியர், வடக்கு மற்றும் தென்னிந்திய இணைப்பை வலுப்படுத்திய ஒரு முனிவர். சமஸ்கிருதம் மற்றும் தமிழை ஒன்றாக இணைக்க அவர் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக இருந்து வருகிறார். அவர், தாய் சீதையைத் தேட ராமரை ஊக்குவித்தார். ராமர்-ராவணப் போரில் மந்திரங்களை வழங்கினார்’ எனத் தெரிவித்தார்.
மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்தர் பிரதான் பேசுகையில், ‘இந்த முறை மகா கும்பமேளா, அனைத்து சனாதன மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை, நாட்டின் நாற்பது சதவீத மக்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். இந்த பிரமாண்டமான நிகழ்வுக்காக உ.பி மக்களின் அபிமான முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் நீர் முழுவதும் காசியின் கங்கையை போலவே புனிதமானது என்று தமிழ்நாட்டின் பாண்டிய மன்னர் கூறியுள்ளார். உலகின் பழமையான மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் இரண்டும் தேசிய மொழிகள். காசி விஸ்வநாதரின் சிலை மற்றும் சின்னம் இல்லாத எந்த கோவிலும் இந்தியாவில் இல்லை. ராமநாதர், ராமேஸ்வரத்தில் அமர்ந்திருக்கிறார்.
இந்த முறை காசி தமிழ் சங்கமம் ரிஷி அகஸ்தியருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் காசியிலிருந்து தமிழுக்குச் சென்று அறிவியல் மீதான தன் அர்ப்பணிப்பை அகஸ்திய முனிவர் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் புனித பூமியைச் சேர்ந்த டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பெண் கவிஞர்கள் மற்றும் நமது தமிழ் சமூகத்தின் புனிதர்களுக்கு வணக்கம்.
இந்த முறை 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், முதல் முறையாக இந்திய அரசு ஒரு அமைப்பை அறிவித்துள்ளது, இதன் மூலம், இந்தியாவின் அனைத்து இதிகாசங்கள், புராண நூல்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும். இன்றைய காலகட்டத்தில் அவற்றின் பொருத்தத்திற்காக முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
சிஐசிடி நூல்கள் வெளியீடு: இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் நிறுவனமான செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 41 இந்தி மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. இதில், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினொன்கீழ் கணக்கு, முத்தொழாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல் உரை, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவன இடம்பெற்றன.
முன்னதாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்தர் பிரதான், துவக்க விழாவிற்கு பின் நமோ காட்டிலிருந்து கங்கையின் படகில் சென்று தரிசனம் செய்தார்.