தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை இலக்காக வைத்து தீவிர அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு விழுப்புரத்தில் விஜய் நடத்திய முதல் அரசியல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து தனி வழியில் செல்வதுபோல் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பரந்தூர் விமான நிலையத்துக்கு இடம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூரில் மக்களோடு மக்களாக போராட்ட களத்துக்கு வந்தார். அவரது ஒவ்வொரு நகர்வும் பேசு பொருளானது. அதேநேரம், ‘நேற்று கட்சி தொடங்கியவர்களெல்லாம் உடனே ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள்’ என்று விஜய்யை மறைமுகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். மேலும், சீமானுடனும் உரசல் ஏற்பட்டது. இப்படி விஜய்யின் அரசியல் பிரவேசம் நாளுக்குநாள் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை மாமல்லபுரத்தில் பிப்.26-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் என 8 முதல் 10 பேர் வரை இடம்பெறுவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.