திமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் தரம் கடுமையாக சரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளின் விவரங்களை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சேகரித்துள்ளதாகவும், அதன்படி 85-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மார்ச் மாதத்துக்குள் மூடும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்தப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் விளிம்பு நிலை மக்களின் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை தடைபடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது
போக்குவரத்து வசதிகளற்ற மலைக் கிராமங்கள், வனங்கள் அடர்ந்த பகுதிகளில் அரசு பள்ளிகள் மட்டுமே மக்களின் ஒரே நம்பிக்கை. எனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் பள்ளிகளை மூடுவதாகவும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதாகவும் அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது.
திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளின் தரம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. பள்ளி கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவழிக்காமல் மடைமாற்றம் செய்வதால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
நீலகிரியில் ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவை தகர்த்தெறியும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், விளிம்பு நிலை மக்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் விபரீதத்தை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.