சான்டியாகோ,
சிலி நாட்டின் தெற்கே பாடகோனியா மண்டலத்திற்கு உட்பட்ட மேகல்லன் ஜலசந்தி பகுதியில் டெல் சிமன்காஸ் (வயது 49) என்பவர், அவருடைய மகன் ஆத்ரியன் சிமன்காஸ் (வயது 24) என்பவருடன் படகில் சவாரி செய்துள்ளார். அவர்கள் இருவரும் தனித்தனியாக படகுகளில் சென்று, சாகச பயணம் மேற்கொண்டபோது, திகில் ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆத்ரியன் படகில் முன்னே செல்ல, டெல் அவரை மற்றொரு படகில் பின்னால் தொடர்ந்து சென்றிருக்கிறார். டெல், தூரத்தில் இருந்தபடி கடலின் அழகை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த தருணத்தில் நடுக்கடலில் பயணித்தபோது, திடீரென திமிங்கல கூட்டம் ஒன்று அந்த வழியே சென்றுள்ளது.
உருவத்தில் மிக பெரிய, ஹம்பேக் வகையை சேர்ந்த அந்த திமிங்கலங்களில் ஒன்று, டெல்லின் மகனை படகுடன் சேர்த்து விழுங்கியுள்ளது. இதனை டெல் வீடியோவாக எடுத்திருக்கிறார். முதலில், அது ஏதோ பெரிய அலை வருகிறது என நினைத்த அவர், நிலைமையை புரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எனினும், சில விநாடிகளில் ஆத்ரியனை அந்த திமிங்கலம் வெளியே துப்பி விட்டது. அப்போது டெல், மகனை நோக்கி அமைதியாக இரு, படகை பிடித்து கொள், அமைதியாக இரு என கூறியுள்ளார். இந்த திகிலூட்டும் சம்பவம் பற்றி ஆத்ரியன் கூறும்போது, நான் தற்செயலாக பார்க்கும்போது, அடர் நீலம் மற்றும் வெண்மை கலந்த நிறத்தில் பின்னால் இருந்து ஏதோவொன்று என்னை நோக்கி வந்தது என அதிர்ச்சியுடன் கூறுகிறார்.
என்ன நடக்கிறது என அவர் அறிந்து கொள்வதற்கு முன்பே, ஆத்ரியனை திமிங்கலம் விழுங்கியுள்ளது. இதனால் இறந்து போக போகிறோம் என அவர் நினைத்துள்ளார்.
அது விழுங்கி, தின்று விட்டது என்றே பயந்து விட்டேன் என ஆத்ரியன் கூறியுள்ளார். எனினும், அவரை திமிங்கலம் வெளியே துப்பியதும் நிலைமையை உணர்ந்து, உயிருடன் இருக்கிறோம் என தெரிந்து கொண்டார். ஆனால், தந்தைக்கு ஏதேனும் ஆகி விட போகிறது என்று ஆத்ரியன் பயந்து போயிருக்கிறார்.
எனினும், தந்தை மற்றும் மகன் என இருவரும் எப்படியோ பாதுகாப்பாக கரைக்கு வந்து சேர்ந்து விட்டனர். ஆனால், திரும்பவும் இதுபோன்று மற்றுமொரு படகு சவாரிக்கு செல்வோம் என இருவரும் துணிச்சலாக கூறுகின்றனர். ஆத்ரியனை நடுக்கடலில் வைத்து திமிங்கலம் ஒன்று படகுடன் சேர்த்து விழுங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.