குமுளி: பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் இரண்டாம் போக சாகுபடி மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு நீர் பெறுவதில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்க பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழைப் பொழிவு இல்லை. இதனால் கடந்த மாத இறுதியில் விநாடிக்கு 328 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து இன்று 55 அடியாக மாறியது. இதே போல் 121 அடியாக இருந்த நீர்மட்டம் 117.5 அடியாக குறைந்தது. விநாடிக்கு தற்போது 457கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிக நீர் வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
பெரியாறு அணையைப் பொறுத்தளவில் 104 அடி வரை தண்ணீர் இருந்தால்தான் சுரங்கப்பாதை வழியே தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்க முடியும். மேலும் சுரங்கப்பாதையில் அடிக்கடி அடைப்புகள் ஏற்படுவதால் 108 அடி இருந்தால்தான் தற்போது நீர் பெற முடியும் என்கிற நிலை உள்ளது.
இந்நிலையில், நீர்மட்டம் வெகுவாய் குறைந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இரண்டாம் போக பயிர் சாகுபடிக்கு நீர்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் திட்டங்களும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “நீர்வரத்தும், நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்துக்கு நீர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் அளவுக்கு பாதிப்பு இருக்காது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து பூஜ்யமாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து தொடங்கியுள்ளது” என்றனர். இந்நிலையில், பருவமழை பெய்து நீர்மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகளும் உள்ளனர்.