திருநெல்வேலி: மத்திய அரசு மேல்தட்டு மக்களுக்கானது; ஏழை, எளிய மக்களுக்கானது அல்ல என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாளையங்கோட்டையில் காந்தி, நேரு, அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியதாவது:
அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் சாசனம் மனுதர்மம் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பாஜக செயல்படுகிறது. அக்கட்சி மேல்தட்டு மக்களுக்கான கட்சி, சாதி ஆதிக்கத்தை ஆதரிக்கும் கட்சி. கடந்த 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட், பாஜகவின் வேஷத்தை கலைத்துவிட்டது. ரூ.1 லட்சம் கோடியை மக்களுக்கு தரப்போகிறோம் என்று தெரிவித்துவிட்டு மேல்தட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 143 கோடி மக்கள் தொகையில் வருமான வரி செலுத்தும் 3.20 கோடி பேருக்கு ரூ.1 லட்சம் கோடியை வழங்கியிருக்கிறார்கள்.
வருமான வரி செலுத்தாதவர்கள், ஏழை, எளியவர்கள் மத்திய அரசுக்கு மக்களாக தெரியவில்லையா. மன்மோகன் சிங் தலைமையில் இருந்த 10 ஆண்டுகால மத்திய ஆட்சியின்போது 6.8 சதவிகிதம் வளர்ச்சி இருந்தது. இப்போது 5.9 சதவிகிதம் வளர்ச்சிதான் உள்ளது. ஒருதரப்பு மக்களுக்கே செல்வம் சேர்கிறது. நாட்டில் யாரும் பட்டினியால் சாகவில்லை ஆனால் பசி இருக்கிறது. பல குடும்பங்கள் 2 வேளைதான் உணவு உண்ண முடிகிறது. இந்த ஏழை எளிய மக்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் அதை மோடி ஒழிக்க நினைக்கிறார். கடந்த 2022-2023-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை ஆண்டுக்கு ரூ.86 ஆயிரம் கோடியை மட்டுமே இத் திட்டத்துக்கு ஒதுக்குகிறார்கள். இந்த ஆண்டு 44 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த திட்டத்தை ஒழிப்பதே பாஜகவின் நோக்கம்.
நாட்டில் 2.27 லட்சம் பேரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடி, 262 பேரின் ஆண்டு வருமானம் ரூ.100 கோடி, 23 பேரின் வருமானம் ரூ.500 கோடி. இவர்களுக்கு பட்ஜெட்டில் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. 500 கோடி வருமானம் ஈட்டுவோருக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டுமா. இதைத்தான் பாராளுமன்றத்தில் கேட்டோம்.
ஆனால் இதை மத்திய நிதியமைச்சர் நியாயப்படுத்தி பேசுகிறார். ஏழை, எளிய மக்களை குறித்து மத்திய பட்ஜெட்டில் ஒரு வார்த்தைகூட இல்லை. விலைவாசி உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய குடும்பங்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்திருக்கிறது. ஆனால் இதை நிர்மலா சீதாராமன் ஒத்துக்கொள்ளவில்லை. நாட்டில் 25 சதவிகிதம்பேர் மிகமிக வறியவர்கள். இவர்களை குறித்து பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரியவில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது குறித்தும் இவர்களுக்கு தெரியவில்லை. வேலைவாய்ப்புக்கான திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.28318 கோடியில், ரூ.20 ஆயிரம் கோடியை மட்டுமே செலவழித்துள்ளனர். இதுபோல் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடவில்லை.
மத்திய அரசின் தற்போதைய பட்ஜெட், தில்லி, பிகார் மக்களுக்கான பட்ஜெட். அதில் தில்லியில் வெற்றி பெற்றுள்ளனர். பிகாரில் வெற்றிபெறுவோம் என்று நம்பியிருக்கிறார்கள். 2022-2023-ல் பெருமுதலாளிகளுக்கு 2.08 கோடியை தள்ளுபடி செய்த மத்திய அரசு, சாதாரண மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய மறுக்கிறது. மத்திய அரசு மேல்தட்டு மக்களுக்கான அரசு, பணக்காரர்களுக்கான அரசு.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து இதை நாம் எதிர்க்கிறோம். மாநில அரசின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். மீண்டும் நமது அரசு மத்தியில் அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை தலைமை வகித்து பேசியதாவது: நமக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரமறுக்கிறது. தமிழ்நாட்டை மத்திய அரசு பழிவாங்குகிறது. வடமாநிலங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்தில் இண்டியா கூட்டணியை பிரிக்க முடியாது.
தமிழகத்தில் இண்டியா கூட்டணி எஃகு கூட்டணி. அதில் குழப்பங்களை விளைவிக்க முயல்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கான கூட்டணியில் இருக்கிறோம். 2026 தேர்தலிலும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி பெருவாரியாக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் ராஜேஷ் குமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராஜேஷ் முருகன் நன்றி கூறினார்.