சென்னை: மயிலாடுதுறையில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம், என்றும் அந்தச் சம்பவத்தின் பின்னணியில் முன்விரோதம் இருந்துள்ளது என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் மூவேந்தன் (24). இவருக்கும் அதே தெருவில் வசித்து வரும் தினேஷ் (28) என்பவருக்கும் வாய் தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஹரிஷ் (25), சக்தி (20), அஜய் (19), ஆகியோர், அந்த தெருவில் நின்று கடந்த 14-ம் தேதி இரவு பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மூவேந்தன், அவரது சகோதரர் தங்கதுரை (28) மற்றும் ராஜ்குமார்(34) ஆகியோர் தினேஷை கத்தியால் தாக்க முயன்றனர். இதைத் தடுக்க வந்த தினேஷின் நண்பர்கள் ஹரிஷ், சக்தி, அஜய் ஆகியோருக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஹரிஷ், சக்தி உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே தெருவில் வசிக்கும் இரு இளைஞர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால், சில ஊடகங்கள், மது விற்பனை தொடர்பாக கொலை நடந்திருப்பதாக உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்த வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
நடந்தது என்ன? – மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூரை அடுத்த முட்டம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது தங்கதுரை, 34 வயது ராஜ்குமார் ஆகியோர், புதுச்சேரி சாராயம், மது பாட்டில்களை காரைக்காலில் இருந்து சட்ட விரோதமாக வாங்கி வந்து, அப்பகுதியில் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியில், தங்கதுரையின் சகோதரரர் மூவேந்தனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 28 வயது தினேஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், தினேஷ், அவரது நண்பர்களான 25 வயது ஹரிஷ், அவரது சகோதரரான 19 வயது அஜய், மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஹரி சக்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் தினேஷிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தியுள்ளனர். தடுக்க முயன்ற ஹரிஷ், ஹரி சக்தி, அஜய் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில் ஹரிஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஹரிசக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அஜய் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சாராய விற்பனையை தட்டிக் கேட்டதாலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததாலும் இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், சாராய வியாபாரிகளை கைது செய்யக் கோரியும் வலியுறுத்தி அரசு மருத்துவமனை அருகே உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக பெரம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால், போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை முட்டம் கிராமத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.