கராச்சி,
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா(2 ஆட்டத்திலும் தோல்வி) வெளியேறியது.
இதனையடுத்து கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 242 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 46 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 243 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து 45.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 57 ரன்னும், டாம் லாதம் 56 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட் வீழ்த்தினார்.