புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரா ணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 3.0 இன்று தொடங்குகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதி வாராணசியில் கடந்த 2 ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வாராணசிக்கும் தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்து உள்ள உறவை புதுப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி நடத்த ஏற்பாடு செய்தார். தற்போது காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 இன்று தொடங்குகிறது. பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிப்ரவரி 25 வரை 10 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவினரை சேர்ந்த 2,400 பேர் 6 குழுக்களாக பங்கேற்கின்றனர். இதன் முக்கிய பொறுப்பு தமிழகத்தின் கடையநல்லூரை சேர்ந்த வாராணசி மாவட்ட ஆட்சியர் தமிழர் எஸ்.ராஜலிங்கத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘கடந்த 2 சங்கமங்களை போல், கேடிஎஸ் 3.0-விலும் வாராணசி தமிழர்கள், தமிழ்நாட்டுடனான ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்த வேண்டும். இது, பிரதமரின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ கொள்கைக்கு மிகவும் அவசியம். இந்த சங்கமத்தில், வடக்கு – தெற்கு மாநிலங்களுக்கு இடையிலான பல்வேறு வகை உறவுகளை உணர்த்தும் வகையில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
முன்னதாக, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து வாராணசியின் வியாபாரிகள் சங்கங்கள், சுற்றுலா நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பினருடன் ஆட்சியர் ராஜலிங்கம் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் வடக்கு – தெற்கு மாநிலங்களின் உறவுகளை விளக்கும் நிகழ்ச்சிகள் நடத்த முன்வரும் வாராணசிவாசிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ஆட்சியர் ராஜலிங்கம் பேசுகையில், ‘‘காசி எனும் வாராணசியில் காசி விஸ்வநாதர், சங்கட மோர்ச்சன், கால பைரவர் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் உள்ளன. கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இங்குள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களை பார்த்தும், தரிசித்தும் செல்லலாம். இந்தப் பட்டியலில் தைலாங் சுவாமி, கேதேஷ்வரர், அகத்தீஸ்வரர், அன்னபூர்ணா, கவுடியா மாதா உள்ளிட்ட பல கோயில்கள் இடம்பெற்றுள்ளன. பழமையான சிருங்கேரி, காஞ்சி, ஜகம்வாடி, குமாரசாமி ஆகிய மடங்களும் உள்ளன. இந்த சங்கமத்தில் முதன்முறையாக சென்னை உள்ளிட்ட ஐஐடி, என்ஐடி மற்றும் நாட்டின் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் பங்கு கொள்கின்றனர்’’ என்றார்.
ராஜலிங்கம் யார்? – கடந்த 2007-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்ற ராஜலிங்கம், உ.பி. மாநில பிரிவில் அமர்த்தப்பட்டார். பணியில் இருந்தபடி தொடர்ந்து முயன்று 2009-ம் ஆண்டு ஐஏஎஸ் ஆனார். பின்னர் உ.பி,யிலேயே பணி அமர்த்தப்பட்டார். கடந்த நவம்பர் 2022 முதல் வாராணசி ஆட்சியராக உள்ளார். இவரது தலைமையில் வாராணசிக்கான வளர்ச்சித் திட்டங்கள் வேகமாக அமலாகி வருவதற்காக பிரதமர் மோடியின் பாராட்டையும் ஆட்சியர் ராஜலிங்கம் பெற்று வருகிறார்.