10,000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்: மஸ்க் பரிந்துரையின்படி ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கினார் ட்ரம்ப்

வாஷிங்டன்: 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பிரிவுத் தலைவராக தொழிலதிபர் எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார். அவரின் பரிந்துரையின்படியே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ட்ரம்ப் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் ஃபெடரல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் உத்தரவு. அமெரிக்க அரசாங்கத் துறைகளில் மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பலர் செயல்திறனற்றவர்கள் என்றும் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்றும் கூறி, ஆட்குறைப்பு செய்யப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியஹு. இருப்பினும் அதிபர் ட்ரம்ப் அவற்றைக் கண்டு கொள்வதாக இல்லை. ஆட்குறைப்புக்கு ஆயத்தமாகலாம் என்று அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி தற்போது 9,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உள்துறை, எரிசக்தி, பணி ஓய்வு பெற்றோர் விவகாரங்கள் துறை, வேளாண் துறை, சுகாதாரத் துறை, சேவைகள் துறை எனப் பல்வேறு துறைகளிலும் இந்த ஆட்குறைப்பு நடந்துள்ளது. சில அமைப்புகளில் 70% வரை ஆட்குறைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து ஓராண்டுகூட நிறைவுபெறாத ‘தகுதிகாண்’ காலத்தில் இருப்பவர்களாவர். மேலும், பணிப்பாதுகாப்பு இல்லாத ஒப்பந்த ஊழியர்கள் ஆவர்.

முன்னதாக செயல்திறன் அற்ற துறைகளாக அறியப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்ததாகவும் அதற்கு ஆயிரக்கணக்கானோர் இசைவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆட்குறைப்பு செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அக்டோபர் மாதம்வரை வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இதனை ஏற்றுக்கொண்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ராஜினாமா செய்ய முன்வந்தனர்.

ஆனால், செலவு தொடர்பான பட்ஜெட் விதிகள் வரும் மார்ச் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிடும், எனவே ஆட்குறைப்புக்கு ஆளாகும் ஊழியர்களுக்கு அதன்பிறகு அறிவித்தபடி ஊதியம் வழங்குவார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று தொழிற்சங்கங்கள் ஊழியர்கள் மத்தியில் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் எதிர்ப்புகள், போராட்டங்கள், பிரச்சாரங்கள் எல்லாவற்றையும் புறந்தள்ளி பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ட்ரம்ப்.

ஃபெடரல் அரசாங்கம் கடனில் இருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப் தேவையற்ற பதவிகளுக்காக அதிகப்பணம் வீணடிப்பதால் பண இழப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கு இந்த பணிநீக்க நடவடிக்கை தேவை என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.