Amaran 100: `இங்க வாங்குற சம்பளத்தை பிடிங்கிட்டு போகிற குரூப்பும் இருக்கு!' – வெற்றி விழாவில் எஸ்.கே

கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது.

எஸ்.கே-வின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் இதுதான். இப்படம் வெளியாகி 100 நாட்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பாளர் கமல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நினைவு பரிசையும் வழங்கினார்கள்.

இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “ இந்தப் படத்துக்கு எனக்கு சரியாக சம்பளம் வந்திருச்சு கமல் சார். அதுவும் ரொம்ப சீக்கிரமாகவே வந்திருச்சு. இப்படியான விஷயங்கள் நடக்கிறதெல்லாம் அரிதான விஷயம். என்னோட படங்கள் ரிலீஸுக்கு முன்னாடி நாள் நான் அன்பு செழியன் அண்ணன் ஆஃபீஸ்லதான் இருப்பேன். இங்க சம்பளம் கொடுக்காமல் இருக்கிற குரூப் மட்டுமில்ல வாங்கின சம்பளத்தை பிடிங்கிட்டு போகிற குரூப்பும் இருக்கு.

அமரன்

உங்களுக்கு தெரியாத விஷயங்கள் இல்ல சார். நீங்களும் பலவற்றை கடந்து வந்திருப்பீங்க. எனக்கு படம் ரிலீஸுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே சம்பளம் கொடுத்து மரியாதையும் கொடுக்கிறதெல்லாம் ரொம்ப அரிதான ஒன்று. கமல் சார், நீங்க எப்படிப்பட்ட நடிகர்னு உலகத்துக்கே தெரியும். உங்களைப் போல நடிக்க இன்னொருத்தர் பிறந்து வரணும்னு சொல்வாங்க. ஆனால், இன்னொருத்தர் பிறந்து வந்தாலும் உங்களை மாதிரி நடிக்க முடியாது. `விக்ரம்’, `அமரன்’ முடிஞ்சு `தக் லைஃப்’ திரைப்படம் ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கேன். உங்களை `உலக நாயகன்’னு கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டீங்க. சரி, வேறென்ன சொல்லிக் கூப்பிடலாம்னு நினைக்கும்போதுதான் மணி சார் `விண்வெளி நாயகன்’னு சொன்னாரு. எதுக்கு உலகம்னு சுருக்கணும். விண்வெளினே சொல்லிடலாம்.” என்றவர், “ இந்தப் படத்துல நான் சாய் பல்லவிக்கு ஸ்பேஸ் கொடுக்கிறதுலாம் இல்ல.

`நான் ஸ்கோர் பண்றேனா…இல்ல சாய் பல்லவி ஸ்கோர் பண்றாங்களா’னு நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல. அவங்க ஸ்கோர் பண்ணினாலும் என் ஹீரோயின் ஸ்கோர் பண்றாங்கனுதான் பார்ப்பேன். அவங்களோ நானோ ஜெயிச்சு எதுவும் பண்ண முடியாது. எங்க படம்தான் ஜெயிக்கணும். படம் பார்த்துட்டு குஷ்பு மேம் கால் பண்ணி, “உங்களோட பீக் ஹீரோயிசம் என்ன தெரியுமா…நீங்க இல்லாமல் பத்து நிமிஷம் ஹீரோயின் கதையை எடுத்துட்டு போக அனுமதிச்சீங்கள்ல அதுதான்”னு சொன்னாங்க. `நான் அனுமதிக்கிறதுலாம் இல்ல. அவங்க என்னோட ஹீரோயின். நான் இல்லைனாலும் பத்து நிமிஷம் அவங்க கதையைக் கொண்டு போறப்போதான் நான் அங்க இருக்கிறதாக உணர்றேன்’னு நான் குஷ்பு மேம்கிட்ட சொன்னேன்.” என்றார்.

Amaran

இந்த மேடையில் பேசிய நடிகை சாய் பல்லவி, “இந்தப் படத்தோட ஹீரோ கேரக்டர்ல நடிக்கிறதுக்கு தைரியமும் நம்பிக்கையும் இருக்கிற ஒரு ப்ரெஷான நடிகர் தேவைனு இயக்குநர் ராஜ்குமார் சொன்னாரு. அவருடைய நம்பிக்கை இப்போ ஜெயிச்சிருக்கு. முக்கியமாக, ஹீரோயினுக்கும் சமமான முக்கியத்துவத்தை வழங்கியிருக்காரு. இப்போ பராசக்தி லுக் பார்த்தோம். சிவகார்த்திகேயன் தன்னை புதுப்பிச்சுக்கிட்டே இருக்காரு. படம் வெளியாகி 100 நாட்கள் ஆகிடுச்சு. ஆனால், ஒரு நாள்கூட என்னை பார்க்கிறவங்க `அமரன்’ படத்தைப் பற்றி பேசாமல் கடந்ததே இல்லை. என்னோட பத்து வருட சினிமா பயணத்துல இப்படியான விஷயங்கள் நடந்ததே இல்ல.” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.