மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லை. இவ்வாறிருக்க, கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கூடிய மணிப்பூர் சட்டமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிப்ரவரி 12-ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டிய சூழலில், பிப்ரவரி 9-ம் தேதி ஆளும் பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கடுத்த நாளே, பட்ஜெட் கூட்டத்தொடரை ஆளுநர் ரத்து செய்தார். இது மக்களைக் காக்கும் முயற்சி அல்ல, பாஜக-வைக் காக்கும் முயற்சி என்று காங்கிரஸ் விமர்சிக்க, பிப்ரவரி 11-ம் தேதி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனால், மாநிலத்தின் தலைநகர் உட்பட பல்வேறு இடங்களில் இந்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுமாறு இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மக்கள் கண்டனப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், “முதல்வரின் ராஜினாமாவையும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதையும் கண்டித்து இந்தப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். மணிப்பூரின் பாதுகாப்பிற்காகச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும். குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாகத் திரும்பப் பெற்று, அமைதியை மீட்டெடுக்க ஒரு தலைவரை நியமிக்க வேண்டும்” என்று போராட்டக் குரலாக வலியுறுத்தினர்.