அமிர்தசரஸ்: அமெரிக்காவில் இருந்து 2-வது ராணுவ விமானத்தில் பஞ்சாப் அழைத்து வரப்பட்ட சட்டவிரோத குடியேறிகளும் கைகளில் விலங்கிடப்பட்டு, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து ராணுவ விமானத்தில் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி 104 இந்தியர்கள் கடந்த 5-ம் தேதி இந்தியா வந்தனர். அவர்களது கைகள் விலங்கிடப்பட்டு, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வீடியோ வெளியாகியது.
சட்டவிரோத குடியேறிகள் மனிதாபிமானமற்ற முறையில் அழைத்து வரப்பட்டதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. இதனால், இந்தியர்களை மனிதாபிமான முறையில் திருப்பி அனுப்ப, அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2-வது விமானத்தில் வந்த தல்ஜித் சிங் என்பவர் கூறுகையில், ‘‘பயணத்தின் போது எங்களது கைகளில் விலங்கு, கால்கள் சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தது’’ என்றார். இவர் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தைத் சேர்ந்தவர். அவர் அளித்த பேட்டியில், ‘‘ நங்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேறிகள் செல்லும் ‘கழுதை பாதை’ வழியாக சென்றோம்’’ என்றார்.
அவரது மனைவி கமல்ப்ரீத் கவுர் கூறுகையில், ‘‘எனது கணவரை அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாக அழைத்து செல்வதாக டிராவல்ஸ் ஏஜென்ட் உறுதி அளித்தார். ஆனால், அவர் பல நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டார்’’ என்றார்.
பஞ்சாப்பில் நேற்று தரையிறங்கிய இந்தியர்கள் அனைவரும் பரிசோதனைக்குப்பின் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.