“உணவில் 50% ஊட்டச்சத்து குறைவு… இதுதான் தீர்வு'' -ஈரோட்டில் நடந்த இயற்கை உழவர் மாநாடு

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் சார்பில், `இயற்கை உழவர் உணவுப் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் இரண்டு நாள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

இந்த மாநாட்டில், 1500-க்கும் மேற்ப்பட்ட இயற்கை விவசாயிகள்,50-க்கும் மேற்ப்பட்ட இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பாரம்பரிய விதைகள், இயற்கை வேளாண் பொருள்கள் கொண்ட 120 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மாநாட்டை மண்ணியல் நிபுணரும், மாநிலத் திட்ட குழு உருப்பினருமான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தொடக்கி வைத்துப் பேசுகையில், “உலகம் எவ்வளவு வேகத்தில் நவீனமயமாகி வருகிறதோ அதே வேகத்தில் நாம் மரபுசார்ந்த இயற்கை விவசாயமும், அதன் மூலம் கிடைக்கும் நஞ்சில்லா உணவுகளும் அழிந்து வருகின்றன. பலவகை சத்துகள் செறிவூட்டப்பட்ட அரசி மற்றும் உணவுப் பொருள்களை உண்டும் நம் குழந்தைகள் பலருக்கு வைட்டமின் பற்றாக்குறை இருப்பதைக் காண முடிகிறது.

மாநாடு

குறிப்பாக, பெண் குழந்தைகள் பெரும்பாலானோர் இரும்புச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இரும்புச்சத்து செறிவூட்டபட்ட அரிசி உட்கொண்ட பிறகும் இன்னும் நம் பெண் குழந்தைகளுக்கு ஏன் ரத்தசோகை குறைபாடு ஏற்படுகிறது? இரும்பை உணவில் உண்டாலும் அதை செறிக்க வேண்டுமானால் நம் குடலில் உள்ள நுண்ணுயிர்கள் வளமுடன் இருக்க வேண்டும். உடலுக்கு நன்மைபயக்கும் இதுபோன்ற நுண்ணியிர்களை ரசாயனம் மூலம் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுகளை உட்கொண்டு அழித்துவிடுகிறோம். அந்த நுண்ணுயிர்களுக்கு மருந்து தேவையில்லை. ரசாயனம் இல்லாத நல்ல சத்தான உணவுதான் தேவை. இதற்கு ஓரே தீர்வு இயற்கை விவசாயம்தான்.

மனிதனுக்கு உயிர்நாடி இதயம் என்பதுபோல், இந்த மண்ணுக்கு மண்ணுக்கு உயிர்நாடி மண்புழுதான். இந்த மண்புழுதான் மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி அந்த மண்புழுவை இல்லாமல் செய்துவிட்டோம். மண்ணில் விழுந்த சாணி வரட்டியாக மாறினால் அந்த மண்ணில் வளமில்லை என்று அர்த்தம். வளமான மண்ணில் சாணம் ஓரிரு நாளில் மண்ணோடு மண்ணாக போக வேண்டும். அந்த நிலைக்கு நம் மண்ணை கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மண்ணை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தற்போது உணர்ந்துள்ளனர். அதை ஒரு கொள்கை முடிவாக ஏற்றுள்ளனர். இதுதொடர்பாக செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயிகளையும், சூழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைப்பது காலத்தின் அவசியமாக இருக்கிறது” என்றார்.

இயற்கை விவசாயிகள்

விவசாயிகள் தோற்றுப் போக காரணம்..

இதைத்தொடர்ந்து கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் பேசுகையில், “இயற்கை வேளாண்மை என்பது பயிர் விளைவிப்பது மற்றும் அந்தப் பொருளைச் சந்தைபடுத்துவது மட்டும் இல்லை. அது ஒரு வாழ்வியல் முறை. இதில் விவசாயிகள் நலம், அரசியல், சுற்றுச்சூழல் சீர்கேடு, இயற்கை வளங்களை காத்தல் என அனைத்தும் அடங்கிறது. விவசாயிகளுக்கு எந்த காலத்தில் எதைப் பயிர் செய்ய வேண்டுமென்ற பட்டம் தெரியும். பயிர் செய்ய தெரியும். ஆனால், அவர்கள் தோற்றுப் போவது விளைந்த பொருள்களைச் சந்தைபடுத்துவத்தில்தான். விவசாயிகள் உற்பத்தியில் செலவிடும் திறனில் ஒரு பங்கு மதிப்புக் கூட்டுதலிலும், சந்தைபடுத்துதலிலும் செலவிட வேண்டும்.

ஊர்கள்தோறும் தெருச் சந்தைகள்..

தேன்கனி வாழ்வியல் மையத்தைச் சேர்ந்த கருப்பசாமி பேசுகையில், “தமிழ்நாட்டில் உழவர் ஒருபுறமும், நுகர்வோர் ஒருபுறமும் என பிரிந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் ஒற்றைப் புள்ளியில் சந்திக்க வைக்க வேண்டும். இதைத்தான் நம்மாழ்வார் விரும்பினார். இயற்கையில் விளைவித்த பொருள்களை பரவலாக்குவதே இதற்கான தீர்வாக அமையும். இதற்கு பெருநகரங்கள் மட்டுமின்றி ஊர்தோறும் சந்தைகள், தெருச் சந்தைகள் என்ற வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.

உணவில் சத்தின் அளவு 50% -க்கு மேல் குறைந்துவிட்டது

சமன்வயா அமைப்பைச் சேர்ந்த ராமசுப்பிரமணியம் பேசுகையில், “40 ஆண்டுகளுக்கு முன்பு உணவில் இருந்த சத்தின் அளவு தற்போது 50 சதவிகித்திற்கு மேல் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ரசாயன உரப் பயன்பாட்டால் உணவின் நச்சுத்தன்மை பல மடங்கு உயர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம். இதை மாற்ற இயற்கை முறையில் விளைவிக்கும் பாரம்பரிய காய்கறிகள், பழங்களை உட்கொள்வது மட்டுமே தீர்வாகும். துரித உணவுகளைத் தவிர்த்து வீட்டில் இருக்கும் சமையல் அறையின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

கண்காட்சி

சுற்றுச்சூழலும், விவசாயமும்…

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் பேசுகையில், “உழவர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுக்காப்பிற்கு மிக முக்கியமான தேவை மண்வளம் பாதுக்காக்கப்பட வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக மலைகளாவும், மண்ணாகவும் இருந்த நமது இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதைத் தடுக்க அரசுகள் கொள்கை முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு தற்போது வந்துள்ளன. பூமியில் இருக்கும் இயற்கை வளங்கள் சுரண்டபடுவதால் அதன் சமநிலை சீர் கெடுகிறது. இதைவெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக மட்டும் பார்ப்பது மிக மிகத் தவறான கண்ணோட்டமாகும். சுற்றுச்சூழலும், விவசாயமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்ததாகும். ஒன்று அழிந்தால் மற்றொன்றும் அழியும். இது தொடர்ந்தால் உலகம் அழியாது. இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் வாழும் சூழல் தான் அழியும். இதைத் தடுக்க வேண்டிய இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்” என்றார்.

தீர்மானம்…

தமிழக அரசின் கடந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் ரூ 42,261 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில், இயற்கை வேளாண்மைக்கு ரூ.21.4 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது மாநிலத்தின் மொத்த வேளாண்மை பட்ஜெட்டில் 0.05% கூட இல்லை. ஆந்திரம், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் இயற்கை வேளாண்மையை பிரதானப்படுத்துவதில் தொலைநோக்கு பார்வையுடனும் நீண்டகால செயல் திட்டங்களும், நஞ்சில்லா உணவு கொண்ட மாநிலமாக மாற்றுவதில் முனைந்து செய்யலாற்றுகின்றனர். தமிழக அரசும் இதுபோன்று நஞ்சில்லா உணவுக் கொள்கையை உருவாக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் பலனடையும் வகையில் இயற்கை விவசாயத்துக்கென கொள்கை மற்றும் செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

மாநாடு

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையில், இயற்கை விவசாயத்திற்கு 30 சதவிதம் நிதி ஒதுக்க வேண்டும். இயற்கையை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.4000 ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இயற்கை விவசாய இடுபொருள்களை பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரித்து வட்டாரங்கள்தோறும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மண்டல அளவில் மரபு விதை வங்கிகள், ஊர்தோறும் இயற்கை வேளாண் சந்தைகளை அமைத்தல், பெண் விவசாயிகளுக்கு விவசாயி அந்தஸ்து வழங்குதல், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டமிடபட்ட இயற்கை வேளாண்மை வளர்சிக்கான செயல் திட்டம், காலை மற்றும் மதிய உணவு திட்டங்களில் அதிக அளவில் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.