“கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்..!'' -திருமாவளவன் கண்டனம்

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

விகடன் குழுமத்தின் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது, கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் பாசிசத் தாக்குதல் என கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தமிழ் வார இதழான ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் ஆகியவை கருத்துச் சுதந்திரத்தை உறுதியாகப் பற்றி நிற்கும் ஒரு ஊடகமாகும். நேற்று இரவு முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்கள் விகடன் இணையதளத்தை அணுக முடியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொல்.திருமாவளவன்

விகடன் இணைய தளம் முடக்கப்பட்டது குறித்து இதுவரை இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. சட்டத்துக்குப் புறம்பாக விகடன் இணைய தளம் முடக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசின் ஃபாசிசப் போக்கையே காட்டுகிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி, ‘விகடன் பிளஸ்’ என்னும் விகடனின் இணைய இதழின் அட்டையில் ஒரு கேலிச் சித்திரம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலிருந்து கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்ததை விமர்சித்து அந்த கேலிச் சித்திரம் வரையப்பட்டுள்ளது. உண்மையில் அந்த கேலிச் சித்திரம் கோடிக் கணக்கான இந்திய மக்களின் உணர்வின் வெளிப்பாடாக இருந்தது. அதனால் அது சமூக வலை தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இது பாஜக ஆதரவாளர்களுக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக தமிழ்நாட்டுத் தலைவர் திரு. அண்ணாமலை விகடனுக்கு எதிராக ஒன்றிய அரசிடம் முறையிட்டதாகவும் , அதற்குப் பின்னரே விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கட்சிக்காரர்களே அரசாங்கத்தின் இணை அதிகார அமைப்பாகச் செயல்படும் இந்தப் போக்கு இந்திய சனநாயகம் குறித்த மிகப்பெரிய கவலையைக் கிளப்புகிறது.

தொல்.திருமாவளவன்

இணையதளங்களை முடக்கும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act), 2000- இன் 69A-பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டத்தின் விதிகள் IT (Procedure and Safeguards for Blocking) Rules, 2009 கடைப்பிடிக்கப்பட வேண்டும். அந்த சட்டத்தின் பிரிவு 69A(1) இன்படி ஒரு இணையதளம் முடக்கப்படுவதற்கு முன்பு அதில் வெளியான செய்தியானது தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாட்டின் இறையாண்மை, வெளிநாட்டு உறவுகள், போன்றவற்றுக்கு எதிராக அது இருக்கிறது என்பது குற்றம் சாட்டப்படுபவருக்கு எழுத்துபூர்வமாகத் தரப்பட்டிருக்க வேண்டும்.

விதி 8ன் படி, இணையதளத்தை முடக்கும் முன், பாதிக்கப்பட்ட தரப்புக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டும்; அவர்கள் விளக்கம் தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

தடை விதிக்கப்பட்டால், அதற்கான காரணங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால், விகடன் குழுமத்துக்கு அப்படி எந்தவிதத் தகவலும் கொடுக்கப்படவில்லை. இது சட்டத்தை மீறிய செயலாகும்.

விகடன் இணையதளத்தை முடக்கியிருப்பது, ஊடகச் சுதந்திரத்திற்கும், மக்களாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாகும். எனவே, ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக இணைய தள முடக்கத்தை நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.