பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்கள் தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா. வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
நகைகள், சொத்துகளை ஏலம் விட்டு, வழக்கை நடத்திய கர்நாடக அரசின் செலவு தொகையை வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண் டும் என பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.ஏ. மோகன், “நகைகள், புடவைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கை நடத்திய கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது அத்தையின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 13-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள், சொத்துகளை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன. தமிழக உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி. விமலா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆவணங்களில் உள்ளவாறு சரிபார்த்து பெற்றுக் கொண்டனர்.
இதனை 12 பெரிய அளவிலான ட்ரங்க் பெட்டிகளிலும், 16 சூட்கேஸ்களிலும் வைத்து அதிகாரிகள் தனி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு சென்றனர். இதுதவிர பெங்களூரு போலீஸார் கர்நாடக எல்லை வரை நகைகளுக்கு பாதுகாப்பு வழங்கினர்.