புதுடெல்லி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில், சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் புதுடெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை 13 மற்றும் 14-ல் நடந்தது. நடைமேடையில் திடீரென ஏற்பட்ட கூட்டம் காரணமாக சில பயணிகள் மயக்கம் அடைந்தனர். இது கூட்ட நெரிசல் போன்ற வதந்தி போன்ற சூழல் பரவ வழிவகுத்தது என்பதை உறுதிப்படுத்திய ரயில்வேதுறை, “இது பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் நெரிசல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிலான கூட்ட நெரிசலைத் தொடர்ந்து வடக்கு ரயில்வே நான்கு சிறப்பு ரயில்களை அனுப்பியது. சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.
18 பேர் உயிரிழப்பு: டெல்லி ரயில்நிலையக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 18 பேரில் 9 பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள், 5 பேர் குழந்தைகள். மேலும் பத்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலின் படி, பாதிக்கப்பட்டவர்களில் வயதில் மூத்தவருக்கு 79 வயது என்றும், குழந்தைக்கு 7 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவிகள்: விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே கூறுவது என்ன?: விபத்து குறித்து ரயில்வேயின் டிசிபி, கே.பி.எஸ். மல்கோத்ரா கூறுகையில், “பிரயாக்ராஜ் செல்லும் விரைவு வண்டி நிறுத்தப்பட்டிருந்த 14வது நடைமேடையில் ஏராளமான பயணிகள் கூடியதால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் சுவதந்திரா விரைவு வண்டி மற்றும் புவனேஸ்வர் ராஜ்தானி விரைவு வண்டிகள் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதமும்12, 13 மற்றும் 14-வது நடைமேடைகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது.
என்ன நடந்தது?: திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பாக மகத் விரைவு வண்டி நடைமேடை 15-க்கு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். பலர் தண்டவாளத்தைக் கடந்து சென்று வெவ்வேறு பெட்டிகளில் ஏறினர்.நடைமேடைகளில் இருந்தவர்களும் வண்டியில் ஏற முயற்சி செய்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
நேரில் பார்த்த சாட்சிகள்: கூட்ட நெரிசல் சம்பவத்தை நேரில் பார்த்த கூலித் தொழிலாளி ஒருவர் கூறுகையில், நடைமேடைகள் 12, 13, 14 மற்றும் 15-களில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. கால் வைத்து நடப்பதற்கு கூட இடம் இல்லை. கூட்ட நெரிசல் ஏற்பட்டதும் எங்கள் தொழிலாளர்கள் உதவி செய்வதற்காக அங்கு ஒடிச் சென்றோம். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தினரின் கால்களுக்கு இடையில் இருந்தும் மக்களை நாங்கள் வெளியே இழுத்தோம். சில உடல்களையும் வெளியே இழுத்துப்போட்டோம். சிறிது நேரத்துக்கு பின்பு ரயில்வே நிர்வாக ஊழியர்கள் வந்தனர். நாங்கள் பலருக்கு உதவினோம்” என்றார்.
போலீஸார் இல்லை: இந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்தவரும், தனது மாமியாரை இழந்தவருமான பிஹாரைச் சேர்ந்த பப்பு என்பவர், சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றார் மேலும் அவர் கூறுகையில், “சுமார் 9 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடத்தில் போலீஸார் யாரும் இல்லை. நிலைமை மிகவும் மோசமாக இருந்தது,யாராலும் யாருக்கும் உதவ முடியவில்லை. கூட்டத்தின் கீழே நசுக்கப்பட்டவர்களை வெளியே இழுக்கவே மக்கள் முயன்றனர்” என்றார்.
எதிர்க்கட்சிகள் சாடல்: இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகளை அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், ராகவ் சந்தா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர். இந்தத் துயரச்சம்பவம் மீண்டும் ரயில்வேத்துறையின் தோல்வியையும், அரசுகளி்ன் அலட்சியத்தையும் காட்டுகின்றது என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு: ரயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், “இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு நபர் உயர் மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. பயணிகள் சிறப்பு ரயில்களில் அனுப்பப்பட்டனர். ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து இயல்பாக உள்ளது” என்றார்.
உயர் எச்சரிக்கை: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே காவல்துறைக்கு மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், குறிப்பாக கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரயாக்ராஜுக்கு செல்லும் சிறப்பு ரயில்களுக்கான நடைமேடைகளில் கூட்டத்தினை ஒருங்கிணைக்கவும், கூட்டம் அதிகரிப்பை விழிப்புடன் கண்காணிக்கவும் ரயில்வே ஏடிஜி பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.