மேட்டூர்: தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக சீமான் செயல்பட்டு வருகிறார் என சேலம் எம்பி., டி.எம்.செல்வகணபதி சாடியுள்ளார்.
மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (16-ம் தேதி) நடந்தது. இதில் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் எம்பியுமான டி.எம். செல்வகணபதி முன்னிலையில் 200-க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் சேலம் எம்பி., செல்வகணபதி பேசியதாவது: மத்தியில் 10 ஆண்டு கால பாசிச மோடி ஆட்சிக்கு துணையாக இருந்த அதிமுக கட்சி, தற்போது இபிஎஸ் தலைமையில் சிதறிக் கிடைக்கிறது. தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட முடியாதா என பாஜக இன்றைக்கு காத்துக் கொண்டுள்ளது. தமிழகம் தான் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. தமிழகத்துக்கு நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களை கொடுக்காமல் புறக்கணிக்கும்போதும் கூட, நிர்வாக திறமையால் முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் வளர்ந்த மாநிலமாக உள்ளது. தமிழகம் மிளிரும் வகையில் நாட்டுக்காகவும் மொழிக்காகவும் முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்.
பாஜகவுக்கு துணையாக இருந்து, நம்முடைய மொழி, இனம், நாட்டுக்கும் தமிழர்களுக்காக பாடுபடுகின்ற இயக்கங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் சீமான் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜகவுக்கு ஊதுகுழலாக சீமான் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஒரு கட்சி தமிழகத்தின் அடையாளத்தை சீர்குலைக்கின்ற, கொச்சைப்படுத்துகின்ற வகையில் தான்தோன்றித்தனமாக பேசி வருகிறார் மிகப்பெரிய போராளியை கொச்சைப்படுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு போர் பயிற்சி பெற்றதாக இளைஞர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நங்கவள்ளி ஒன்றியச் செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன், பேரூர் செயலாளர் முருகன் செய்தனர். இதில் மாவட்ட, நகரம், ஒன்றிய, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.