வேலூர்: “தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்வது சரியில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், ‘2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக வேலூர் மண்டல இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ‘இலக்கு 2026 – இலட்சிய மாநாடு’ வேலூர் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியது “இன்று நிறைய பேருக்கு தூக்கம் வராது. காரணம், ஜார்ஜ் கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு விரட்டும் கூட்டம் வேலூர் கோட்டையில் இருந்து புறப்பட்டுவிட்டது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும்.
தீய சக்தி திமுகவை விரட்ட வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். இளைஞர்களை எம்ஜிஆர் நம்பினார். அவரது பின்னால் இளைஞர்கள் சென்றனர். பல்வேறு இளைஞர் அணிகளை எம்ஜிஆர் உருவாக்கினார். இதையடுத்து, 2008-ம் ஆண்டு ஜெயலலிதா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தொடங்கினார். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர். இதன் மூலம் அதிமுக வலுப்பெற்றது.
தமிழகத்திலேயே இளைஞர்கள் அதிகமாக உள்ள இயக்கம் அதிமுகதான். இதனால், கிராமிய விளையாட்டு அணி என்ற புதிய அணியை உருவாக்கியுள்ளோம். எனவே, இளைஞர்கள் சிப்பாய்களை இருந்து தேர்தல் பணியை செய்ய வேண்டும்.
அதிமுக அறிக்கை, பாஜகவை ஒட்டியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக மக்களையும், தொண்டர்களையும் நம்பியுள்ள கட்சி. நாங்கள் யாரையும் தேடி செல்ல வேண்டியதில்லை, எங்களை தேடி யாரும் வருவார்கள். திமுக கூட்டணி கட்சிகளை நம்பியுள்ளது. சந்தர்ப்பவாத அரசியல் செய்வது திமுக.
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது, அவர்களின் கதறல் ஸ்டாலின் செவிக்கு கேட்கவில்லையா? கடந்த இரு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 107 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 56 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தமிழகம் வந்த பிரதமருக்கு கருப்பு கொடி காட்டினார். தற்போது மத்திய அமைச்சரை அழைத்து வந்து கலைஞர் நூற்றாண்டு விழா நடத்துகிறார். இப்படி இரட்டை வேடம் போடுவது ஸ்டாலின் வழக்கம்.
அதிமுக கூட்டணி வேறு, கொள்கை வேறு என இருக்கும் கட்சி. ஆனால், திமுக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக்கொடுப்பார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் வந்துவிட்டது. 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். தொண்டர்கள் மற்றும் மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும்.
மத்திய அரசுக்கு நாங்கள் விடுக்கும் கோரிக்கை என்ன வென்றால், தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேசிய கல்வி கொள்கையை பின்பற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்வது சரியில்லை. தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும். அதுவே, அதிமுகவின் நிலைபாடும் கூட. இதில் மாற்றுக்கருத்து கிடையாது.
100 நாள் வேலை திட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். மத்தியில் உள்ள திமுக மக்களவை உறுப்பினர்கள் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு அழுத்தும் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, நிதி ஒதுக்கவில்லை என பேசக்கூடாது.
திமுக தேர்தல் அறிக்கையில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறதிகளை கொடுத்தார்கள். அதில் 15 சதவீதம்தான் நிறைவேற்றினார்கள். குறிப்பாக, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னார்கள். உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறினார். அந்த ரகசியத்தை அவரே மறுத்துவிட்டார். இப்படி பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர்.
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதால் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றினோம். அதேபோல, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். தொழில் முதிலீடுகள் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கினோம்.
மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை வழங்கினோம். இப்படி மக்களுக்கு தேவையான எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் ஏதாவது கொண்டு வரப்பட்டதா?
இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடனை ஸ்டாலின் வாங்கி விடுவார். இதுதான் ஸ்டாலின் செய்த சாதனை.
அதிமுக ஆட்சியில் அரிசி விலை 45 முதல் 50 ரூபாயாக இருந்தது. தற்போது 70 முதல் 80 ஆக உயர்ந்துவிட்டது. அதேபோல, மளிகை பொருட்கள் விலை, மின்கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம், வீட்டு வரி என அனைத்தையும் திமுக அரசு உயர்த்தி மக்களை வஞ்சித்துள்ளது. மக்களின் வருவாய் குறைந்து செலவு அதிகரித்துவிட்டது. இதையெல்லாம் தெரியாத பொம்மை முதல்வராகவும், எழுதி கொடுப்பதை படிக்கும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.
தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது எனக் கூறினோம். தற்போது முதல்வர் ஸ்டாலின் போதை பாதையில் இளைஞர்கள் போகவேண்டாம் என விளம்பரம் செய்து வருகிறார். தமிழக காவல் துறை ஏவல் துறையாக மாறிவிட்டதால் தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. கடந்த 2 மாதத்தில் 141 கொலை தமிழகத்தில் நடந்துள்ளது. எங்கு பார்த்தாலும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்கிறது.
திமுக அரசுக்கு எதிராக மக்கள் மட்டும் அல்ல, விவசாயிகள், நெசவார்கள், அரசு ஊழியர்கள் கூட தினமும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றிப்பெற வேண்டும் என்பதால் திமுக பல தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, அதிமுக பாசறை இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 10 முதல் 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். எனவே, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அதில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க அதிமுக தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.
வரும் தேர்தலில் பூத் பணியாளர்கள் விழிப்புடன் தேர்தல் பணியில் ஈடுபட்டு, கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.