கோவை: முதல்வர் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகள் மூலம் பணம் சம்பாதிக்க மும்மொழி வேண்டும். மறுபுறம் மக்களை ஏமாற்ற இருமொழி என்ற நிலைப்பாடு கொண்டிருப்பதாக, ஹெச்.ராஜா தெரிவித்தார்.
பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கோவை, சுந்தராபுரம் பகுதியில் ஞாயிறு மாலை நடந்தது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக மத்தியில் ஆட்சியமைத்த போது வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. 2019-ம் ஆண்டில் பாஜக அரசு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது.
2023-ம் ஆண்டு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. எனவே அனைவர் மத்தியிலும் இவ்வாண்டு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பத்து லட்சத்திற்கு மேல் யாரும் நினைத்து பார்க்காத நிலையில் ரூ.12.75 லட்சமாக இவ்வாண்டு பட்ஜெட்டில் நிதியமைச்சர் உயர்த்தி அறிவித்தார். கடைசி பந்தில் வீர தமிழச்சி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிக்ஸ் அடித்து அசத்தியுள்ளார்.
இதனால் மத்திய அரசுக்கு நேரடி வருவாய் ஒரு லட்சம் கோடி குறைந்துள்ள போதும் மறுபுறம் நடுத்தர வர்க்கத்தினர் கையில் நிதி இருப்பு இருக்கும். இதனால் நுகர்வோர் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். அதன் மூலமாக பொருளாதாரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் சொத்து பிணையமின்றி கடனுதவி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் பொழுது போகவில்லை என்றால் மொழி பிரச்சினையை கையில் எடுத்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஸ்டாலின் இருமொழி கொள்கையை ஏற்பவர் என கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினர் உள்பட திமுக-வினர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகளில் சமச்சீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தர்ணா போராட்டத்தில் நான் ஈடுபடுவேன்.
ஆற்காடு விராசாமி, துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரின் குடும்பத்தினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகள் பட்டியலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான் வெளியிட்டேன். நீங்கள் பணம் சம்பாதிக்க மும்மொழி. மக்களை ஏமாற்ற இருமொழி நிலைபாடு. அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் இருக்கலாம் என்றால் அரசு பள்ளிகளில் ஏன் மும்மொழி பாடத்திட்டம் அமலில் இருக்க கூடாது” இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.