இம்பால்: மணிப்பூரின் காங்போக்பி மலைப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட பயிர்களை ராணுவத்தினர் அழித்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 90 சதவீதம் மலை, 10 சதவீதம் பள்ளத்தாக்கு பகுதி ஆகும். பள்ளத்தாக்கில் மைதேயி மக்களும் மலைப் பகுதியில் குகி மக்களும் வசிக்கின்றனர். இதில், குகி பழங்குடி பகுதிகளில் பல்வேறு தீவிரவாத குழுக்கள் உருவாகி, மலைப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பயிர்களை வளர்த்து வருகின்றன.
இந்நிலையில், காங்போக்பி மலைப் பகுதியில் 6 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா, ‘ஒபியம் பாப்பி’ உள்ளிட்ட பயிர்களை அசாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎஃப் வீரர்கள் சில நாட்களுக்கு முன்பு அழித்தனர்.
இதுகுறித்து அசாம் ரைபிள்ஸ் அதிகாரிகள் நேற்று கூறியபோது, “மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. ஆளுநர் அஜய்குமார் பல்லா உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் தீவிரவாதம், போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. மணிப்பூரில் விரைவில் அமைதி நிலைநாட்டப்படும்” என்று தெரிவித்தனர்.