புதுடெல்லி: ராணுவத்துக்கு ட்ரோன் வழங்கிய நிறுவனத்திடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராப் எம்பைபர் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ட்ரோன்களை விற்பனை செய்தது. இதற்காக ரூ.55.96 கோடி மதிப்பிலான விலைப்பட்டியல் வழங்கப்பட்டது. இந்தத் தொகையை, ராணுவம் சார்பில் பாதுகாப்பு கணக்குகள் பிரிவின் முதன்மை கட்டுப்பாட்டாளர் (பிசிடிஏ) அலுவலகம் ராப் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளது.
அதன் பிறகு ரூ.10 லட்சத்தை லஞ்சமாக தருமாறு பிசிடிஏ-வின் மூத்த கணக்கு தணிக்கையாளர் தீப் நாராயண் யாதவ் உள்ளிட்ட 3 அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். இந்தத் தொகையை தராவிட்டால், வரும் காலங்களில் ட்ரோன்களை விற்பனை செய்தால் அதற்கான பணத்தை வழங்க முட்டுக்கட்டை போடுவேன் என மிரட்டி உள்ளார்.
இதுதொடர்பாக ராப் நிறுவனத்தின் நிதித் துறை துணைத் தலைவர் வருண் நரங், சிபிஐ அலுவலகத்தில் பிப்ரவரி 7-ம் தேதி புகார் செய்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அதன் பிறகு, சிபிஐ அதிகாரிகளின் வழிகாட்டுதல் பேரில் ராப் நிறுவனத்தினர் முதல்கட்டமாக ரூ.8 லட்சத்தை பிசிடிஏ அதிகாரி ஒருவரிடம் வழங்கி உள்ளனர். அப்போது, நடந்த உரையாடலை பதிவு செய்துள்ளனர். இந்த உரையாடலின் அடிப்படையில், சிபிஐ அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய அதிகாரியை கைது செய்தனர். பின்னர் தீப் நாராயண் யாதவ் மற்றும் ஆகாஷ் பாலிடெக்னிக் நிறுவன உரிமையாளர் ஆகாஷ் கபூர் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.