சஹரன்பூர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில், உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இளம் பெண் ஒருவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ஊசியை செலுத்தியதாக அவரது மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த புகாரின் பேரில் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தாக்கல் செய்த புகார் மனுவில், “நான் எனது மகள் சோனால் சைனியை, உத்தராகண்டின் ஹரித்வாரைச் சேர்ந்த அபிஷேக் என்ற சச்சின் என்பருக்கு கடந்த 2023, பிப்.15-ல் திருமணம் செய்து கொடுத்தேன். திருமணத்தின் போது, மாப்பிளைக்கு வரதட்சணையாக, ஒரு காரும், ரூ.15 லட்சமும் கொடுக்கப்பட்டது. இதில் திருப்தியடையாத எனது மகளின் மாமியார் மற்றும் குடும்பத்தினர், சில நாட்களுக்கு பின்பு மாப்பிள்ளைக்கு ஒரு எஸ்யுவி காரும் ரூ.25 லட்சமும் கேட்டு கொடுமைப் படுத்தினர்.
நான் அவர்களின் பேச்சைக் கேட்க மறுத்த நிலையில் எனது மகள் சோனால் சைனியை வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டனர். பின்பு ஹரித்வாரில் உள்ள கிராம பஞ்சாயத்தினரின் தலையீட்டால், எனது மகள் மீண்டும் கணவர் வீட்டுக்கு வாழ அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை மீண்டும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, “எனது மகளை கொலை செய்வதற்காக அவளின் மாமியார் மற்றும் குடும்பத்தினர் மகளுக்கு எச்ஐவி தொற்றுள்ள ஊசியை செலுத்தியுள்ளன. எனது மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது.” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால், மகளின் குடும்பத்தினர் மீது காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தந்தையின் குமுறல். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தந்தை உள்ளூர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி தற்போது, அபிஷேக் என்ற சச்சின், அவரது பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மீது வரதட்சணை கொடுமை, தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.