விகடன் இணையதளம் முடக்கம்: தலைவர்கள் கண்டனமும், பின்னணியும் என்ன?

சென்னை: ஆனந்த விகடன் குழுமத்தின் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்: “இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் விகடனின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து விகடனில் வெளியிடப்பட்ட கார்ட்டூனுக்காக விகடன் இணையதளத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்கி இருக்கிறது. நெருக்கடி காலத்தை அடிக்கடி நினைவூட்டுகிற பிரதமர் மோடி ஆட்சியில் நெருக்கடி நிலை காலத்தையே மிஞ்சுகிற அளவுக்கு ஊடக பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த அறிக்கையில், உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை மதிப்பிடப்படுகிறது. 180 நாடுகளின் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 2024-இல் இந்தியா 159ஆவது இடத்தில் உள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு எதிரான எதேச்சதிகாரப் போக்கை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். விகடன் இணையதளத்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றி வருகிறார். இந்தியாவின் முதன்மை பொறுப்பில் உள்ள மோடி, அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காகத் தான் பார்க்க வேண்டும். அதை குறியீடாக வைத்து கருத்துப் படத்தை விகடன் வெளியிட்டது. அதையே தாங்க முடியவில்லை. இந்த நாட்டு குடிமக்களை வலுக்கட்டாயமாக கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பியதை விடவா இது அசிங்கமாகப் போய்விட்டது.

அண்ணாமலை விகடனை எச்சரித்ததாக சொல்கிறார்கள். அவர் ட்ரம்பை எச்சரிக்க வேண்டியது தானே! நாங்களும் அண்ணாமலையை எச்சரிக்கின்றோம். அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள் என எச்சரிக்கின்றோம். நாற்காலி நிரந்தரமானது அல்ல. மேலே இருப்பது கீழே வரும். கீழே இருப்பது மேலே வரும். வரலாறு, காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். இது ஜனநாயக நாட்டுக்கு நல்லதல்ல” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்: “விகடன் இணையதளப் பக்கத்தை முடக்கியது ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்துக்கு உரிய ஃபாசிச அணுகுமுறை. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

தமிழக பாஜக சொல்வது என்ன? – “அரசை, ஆட்சியாளர்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் உண்டு. வரலாற்றிலேயே அதிக அளவு விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும், எல்லை மீறிய வசவுகளையும் எதிர்கொண்ட ஒரே அரசு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தான். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோதிலிருந்தே, அவர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை பல ஊடகங்கள் செய்து வருகின்றன. அவற்றையெல்லாம் பிரதமர் மோடியும், பாஜகவினரும் பொருட்படுத்தியதே இல்லை. காரணம் பிரதமர் மோடியும் பாஜகவும் நம்புவது மக்களை மட்டுமே.

அரசை, ஆட்சியாளர்களை விமர்சிக்க உரிமை இருக்கிற அதே நேரத்தில், நாட்டை கொச்சைப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. கருத்து சுதந்திரத்தின் எல்லை என்பது ஆட்சியாளர்கள் வரைதான். நாட்டின் மீதல்ல. நூற்றாண்டை கொண்டாட இருக்கிற புகழ்பெற்ற ஆனந்த விகடன் குழுமம், பிரதமர் மோடியை, பாஜக அரசை, கொச்சைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, இந்திய திருநாட்டையும், அதன் 140 கோடி மக்களையும் அசிங்கப்படுத்தி இருக்கிறது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.

அமெரிக்க அதிபரின் முன்பு, இந்திய பிரதமரின் கை, கால்களில் விலங்கிட்டு இருப்பது போன்ற கார்ட்டூன் வரைந்திருப்பது, பிரதமர் மோடி மீதான தாக்குதல் அல்ல. பிரதமர் பதவியில் இருப்பவர்கள் மாறலாம். ஆனால், பிரதமர் பதவி என்பது மரியாதைக்குரியது. அதை கொச்சைப்படுத்தி இருப்பதை ஏற்கவே முடியாது. அதனால்தான் விகடன் பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். 140 கோடி இந்தியர்களின் எண்ணமும் அதுதான்.

தமிழகத்தில் திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் ஒரு வார்த்தை எழுதினாலே கைது, சிறை என்று அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள். உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பலமுறை எச்சரித்தும் கூட சமூக ஊடகங்களில் திமுக அரசை விமர்சிப்பவர்களை வேட்டையாடி வருகிறது ஸ்டாலின் அரசு.

ஆனால், இன்று நாட்டை கொச்சைப்படுத்திய விகடனுக்கு ஆதரவாக பத்திரிக்கை சுதந்திரம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. பத்திரிகை சுதந்திரம் பற்றி பாஜகவுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். ஏனெனில், மூன்றாவது முறையாக தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தும் ஊடக சுதந்திரத்தை மதிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எங்கள் மீது எத்தனை விமர்சனங்கள் வைத்தாலும் பொறுத்துக் கொள்வோம். நாட்டை கொச்சைப்படுத்துவதை ஒரு நாளும் பொறுக்க மாட்டோம்” என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.

நடந்தது என்ன? – இந்த விவகாரம் தொடர்பாக விகடன் நிறுவனம் அளித்துள்ள விளக்கம் ஒன்றில், “விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும், மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.

முன்னதாக, விகடன் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பல இடங்களில் விகடன் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று வாசகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அரசு தரப்பில் இதுவரை விகடன் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் வரவில்லை. நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம். ஒருவேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.