அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் வந்த 3-வது விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
ஞாயிறு இரவு 10 மணியளவில் தரையிறங்கிய சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் பஞ்சாபை சேர்ந்தவர்கள் 31 பேர், ஹரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்தவர்கள் 33 பேர், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இருவர், இமாச்சல் மற்றும் உத்தராகண்டிலிருந்து தலா ஒருவர் என மொத்தம் 112 பேர் இருந்துள்ளனர்.
ஆவண சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் முடிந்த பிறகு அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த 2 விமானங்களிலும் வந்தவர்களுக்கு கைகளில் விலங்கிடப்பட்டது சர்ச்சையானது. ஆனால் 3வது விமானத்தில் வந்தவர்களுக்கு கைகளில் விலங்கிடப்பட்டதா இல்லையா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், சட்டவிரோத குடியேறிகளை கைது செய்து ராணுவ விமானத்தில் அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி 104 இந்தியர்கள் கடந்த 5-ம் தேதி இந்தியா வந்தனர். அவர்களது கைகள் விலங்கிடப்பட்டு, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வீடியோ வெளியாகியது.
சட்டவிரோத குடியேறிகள் மனிதாபிமானமற்ற முறையில் அழைத்து வரப்பட்டதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. டெல்லியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது. இதனால், இந்தியர்களை மனிதாபிமான முறையில் திருப்பி அனுப்ப, அமெரிக்காவிடம் இந்தியா வலியுறுத்தியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2-வது விமானத்தில் வந்தவர்களுக்கும் கைகளில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.